ஆர்.கே.
இறங்காத போதை
யார் என்னைத் தீண்டி
சவ்வூடு பரவல் போல உள்ளே நுழைந்து
நிரப்புவது என்னை?
இரவின் கரிய உடல்
வெதுவெதுப்பான திரவமாக
நாளும் வருகிறாய்
உடல் உயிர்களை மாற்றிக் கொள்கிறோம்
யாருக்கோ பயந்த பெண் நீ
சொல்லிக் கொள்ளாமல்
உன் உடலை உருவிக்கொண்டு
ஓடி விடுகிறாய்
ஆனாலும் ஜாக்கிரதையான காதலி
உன் நினைவிலிருந்து மீண்டு விடாதிருக்க
போகும் போது உன் சல்லாத் துணியை
என் புலன்களின் மீது திரைஇட்டுச் செல்கிறாய்
பயப்படாதே
சிறை நேசிக்கும் கைதி நான்
மீண்டும் அறை மனிதனான தவிப்பில்
விழுகிறேன் பகல் நெருப்பில்
எத்தனை முறை கலவியில் ஆழ்ந்தும்
உன் முகம் காட்ட மறுக்கிறாய்
உன் குரலின் சின்ன கிசுகிசுப்பு
முனகல் கூட கேட்டதில்லை
வேண்டாம் இந்த அபாய ஆர்வம்
யுளிசிசாக வெற்றுத் தடல்கள் மீது வருடங்களாக
அலைய சபிக்கப்பட வேண்டாம்
வா வந்து எனது உடலை அணிந்துகொள்
கரிய உன் கூந்தலால் மூடு என்னை
வா, மரப்பலகையால் செய்யப்படாத சவப்பெட்டியே
சமாதியின் சுகத்தை அளிப்பாய்
திருமணத்துக்கு முன்பே தன்னை இழக்கத்
துணிந்த காதலியைப் போல்
என்றோ ஒரு நாள் மனம் ஒப்பி
உன் முகத்திரையை நீக்குவாய்
அப்போது உன் கண்களின் வழியாக நுழைவேன்
மரணம் புகாத சம வெளிக்குள்
உள்ளுறை ஜுலை -ஆகஸ்ட் ௨௦௦௯
சனி, 22 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)