கவிதையும் உரைநடையும்
ஒரு கவிதை என்பது புனைவாற்றல்மிக்க, சொற்பொருள் சார்ந்த, ஆக்கப்பூர்வமான தார்மீக அறிக்கை. அந்த அறிக்கையில் கவிதையே படைப்பாளி, அச்சுப்பொறியோ, சொற்செயலியோ அல்ல. வரிகள் எந்த இடத்தில் நிறைவடைய வேண்டும் என்பதைக் கவிதைதான் முடிவு செய்ய வேண்டும். இந்தக் கிளர்ச்சியின்மைமிக்க வரையறை, ஒரு நேர்த்தியின்மையின் கவித்துவமின்மை, நமது செயல்பாட்டின் சிறப்புத் தன்மையாக மாறக்கூடும். இருப்பினும், நாம் அதைத் துண்டு துண்டாக வெட்டி ஆய்வு செய்வதற்கு முன், அது எதைப் பற்றிக் கூறுகிறது என்பதைவிட, அது எதைப் பற்றிக் கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒலியியைபு, சீர், அசை, படிமம், நடை அல்லது குறியியல் என எதற்கும் அது எந்தவிதமான சான்றாதரத்தையும் உருவாக்குவதில்லை என்பதிலிருந்து துவங்குவோம். ஏனெனில், இவ்வாறான கூறுகளைப் பயன்படுத்தாத பல கவிதைகள் உள்ளன, மேலும் இவ்வாறான கூறுகளைப் பயன்படுத்தக்கூடிய பல உரைநடைகளும் அதிகமாக உள்ளன. உரைநடை உள்வய ஒலியியைபுகளைப் பயன்படுத்தக்கூடும், அது பொதுவாக அசை, படிமம், குறியியல், சொல்-இசை, உரையாடல் வடிவங்கள், மிகை மொழி என இவற்றைப் போன்றவற்றின் வள ஆதாரங்கள் மீது முற்றிலும் திடீரென ஒரு தாக்குதலை நடத்துகிறது. வாலஸ் ஸ்டீவென்ஸ் சொல்லொழுங்குரீதியானவர், ஆனால் மார்ஸல் பிரவ்ஸ்ட் அவ்வாறல்ல. வர்ஜீனியா உல்ப்பின் உரைநடை ஜான் ட்ரைடன் கவிதையைவிட உருவகரீதியாக எழுச்சியூட்டக் கூடியது, இங்கு கிரிகோரி கார்ஸோ ஒரு குறிப்பீடு அல்ல. பிலிப் லார்கினிடம் உள்ளதைவிட ஜோஸப் கான்ராடிடம் உள்ளது அதீதச் சொற்கலைப்பூர்வ மிகை மொழி.
பொதுவாக உரைநடை, சீரைப் பயன்படுத்துவதில்லை என்பது உண்மை. ஒட்டுமொத்தமாக, நிறைவு-ஒலியியைபுகள் போல கவிதைக்கு சீர் ஒரு சிறப்பியல்பு; ஆயினும் பல கவிதைகள் சீர் இல்லாமல் முற்றிலும் மிகச் சிறப்பாக உயிர்ப்புடன் இருப்பதால், அது அரிதாகவே ஒரு கவிதையின் சாராம்சமாக இருக்க முடிகிறது. பின்னர் கவிஞர் முடிவுக்குக் கொண்டுவரும் வரி முடிவுகளுடன் நாம் வெளியேறுகிறோம். இது ஒரு எல்லை வரை உண்மையாகவே இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வகை சீர், வரிகள் எங்கு முடிவடைய வேண்டும் என்பதை அதுவே தீர்மானிக்கிறது. ஆயினும் ஒரு கவிஞர் குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சீரைத் தேர்வு செய்கிறார். சுமார் 1750 நையாண்டி எழுத்துகள், வீர ஈரடிக் கவிதைகளே மிகப் பொருத்தமான வடிவம் எனக் காண்கையில், சுமார் 1600 நாடகீய எழுத்துகள் ஒரு வெறுமையான கவிதையைப் பயன்படுத்த இயல்பாகவே எதிர்பார்க்கப்படுகிறது.
கவிதையில் உள்ள வரி-முடிவுகள் எப்பொழுதும் அர்த்தங்களை அறிவிப்பதில்லை, ஆனால் அவ்வாறு செய்யவே அவை எப்பொழுதும் உருவாக்கப்படுகின்றன. அவை ஒரு வகைப் படிமமாகவும் கூடச் செயல்புரிகின்றன. ஜான் கீட்ஸின் ஆடல் பாடல் வகையான ‘To Autumn’ கவிதையிலிருந்து எஃப்.ஆர்.லீவிஸ் அந்த வகையை அடையாளம் காண்கிறார்:
And sometimes like a gleaner thou dost keep
Steady thy laden head across a brook . . .
“keep” என்பதிலிருந்து துவங்கி “steady” என்பது வரை வரி-பிரிப்புனூடாக நாம் கடந்து செல்வதால், ஒரு கல்லிலிருந்து மற்றொன்றிற்கு அடி எடுத்து வைப்பது போல, திரட்டுதலின் உறுதியான சுமத்தலை ஒப்புமைரீதியாக நிலைப்படுத்துவதை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என லீவிஸ் உள்வாங்குகிறார்1. வாசகர் இந்தக் கருத்துரையை உண்மையாகவே ஒரு அறிதிறனாக, அல்லது ஒரு இரட்டையர் மோதலில் சில கவித்துவ விவரணைகளின் ஓசையுடன் காற்றை வெட்டும் “ஸ்” ஒலியலைகளில் கூர் ரம்பத்தின் வெட்டியெடுத்து உந்தும் ஒலியைக் கேட்க வேண்டுகிற விமர்சன வகையின் அதீத நுட்பமான பதிப்பாகக் காணலாம்.
உரைநடை என்பது இதற்கு முரணான ஒரு வகை எழுத்து. அதில் வரிகள் எங்கு முடிவடைய வேண்டும் என்பது பொருட்படுத்தப்பட வேண்டிய விசயம் அல்ல. அது மிகத் தெளிவாக ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விசயம். அங்கு அரிதாகவே “கவித்துவம்” போன்றதொரு உபகரணச் சிந்தனை உள்ளது. அது ஏதாவது ஒரு இடத்தில் உரைநடையின் சில துணுக்குகளால் தீண்டப்படாமல் இருக்கும். உரைநடை என்பது பாடல் வடிவத்திலும், உள்வயமாக ஒடுங்கியும், மென்மையான உணர்வுகளுடன் பிரவகித்தலோடும் இருக்கலாம். ஆனால் கவிதை 19-ஆம் நூற்றாண்டு அயர்லாந்தின் நில யுத்தங்கள் பற்றிய விவரணைகளை நினைவு கூறலாம். இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒழுங்கைச் சிதைப்பதற்கான முதிர்ந்த மேம்பாடு.
உதாரணத்திற்கு, டி.எச்.லாரன்ஸின் சிடுசிடுத்து வெறுக்கும் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம்:
நான் பெறாத உணர்ச்சிகளை நான் பெறவில்லை.
நான் பெறாத உணர்ச்சிகளை நான் பெற்றிருப்பதாக நான் கூறவில்லை.
நீங்கள் பெற்றுள்ளதாக நீங்கள் கூறும் உணர்ச்சிகளை நீங்கள் பெறவில்லை.
நாமிருவரும் பெற வேண்டும் என நீங்கள் விரும்பும் உணர்ச்சிகளை நாம் பெறவில்லை.
மக்கள் பெற்றிருக்க வேண்டிய உணர்ச்சிகளை அவர்கள் பெறவில்லை.
உணர்ச்சிகளைப் பெற்றுள்ளதாக மக்கள் கூறினால், அவர்கள் அவற்றைப் பெறவில்லை என்பதில் நீங்கள் ஓரளவு உறுதியுடன் இருக்கிறீர்கள்.
எனவே நம்மில் யாராவது எதையாவது உணர வேண்டுமென நீங்கள் விரும்பினால்,
உணர்ச்சிகளைப் பற்றிய அனைத்து எண்ணங்களையும் நீங்கள் முற்றிலும் துறந்து விடுவது நல்லது.
(‘To Women, As Far As I’m Concerned’)
எது இதை ஒரு கவிதையாக உருவாக்குகிறது? நிச்சயமாக அது அதிதீவிர எழுச்சியின்மை கொண்ட மொழியின் தரம் அல்ல. இந்தப் பகுதி அதன் மனப்பாங்குகளில் உள்ளது போல அதன் மொழியில் முரட்டுத்தனம் போலவும் முன்னேற்பாட்டு நிலை போலவும் உள்ளது. இந்தக் கவிதை ஒலியியைபுடன் இல்லை (‘பெறுதல்’ எனும் வார்த்தை ஒரு ஒலியியைபாகத் திரும்பத் திரும்ப வருவது தவிர), அல்லது இக்கவிதையில் சீர் செயல்படவில்லை (இது வசன கவிதை என அழைக்கப்படுவதாக உள்ளது). இது குறியியல், உருவகம், மறைபொருள் உரையாடல், இருண்மை, உருமாற்றம், கருத்தியல் உபபிரதி மற்றும் மீதமுள்ள அனைத்தையும் தவிர்க்கிறது. சிக்கலான உணர்வு நிலைகளை ஆராய்வதற்கு மாறாக, ஒட்டு மொத்தச் செயல்பாட்டையும் கடுஞ்சினத்துடன் நிராகரிக்கிறது. எனினும், அதன் கருத்தில் கவனத்தை ஈர்க்க ஓசைநயத்தையும் திரும்ப நிகழ்த்தலையும் கையாள்கிறது. இந்த ஓசை ஒழுங்கமைப்பை நிறுவுதல் வரி-முடிவுகள் மீதான கவனத்தை உள்ளடக்கியுள்ளது. உரைநடை போல இந்த வரிகள் ஒன்றிணைந்து கோர்வையாக இருந்திருந்தால், ஒரு மேசை மீது முஷ்டியால் தட்டுவது போல இந்தச் சாராம்சம்மிக்க ஓசைரீதியான உயிர்த்துடிப்பு காணாமல் போயிருக்கும். எனவே, ஒரு கவிதையாக இதைக் கட்டமைப்பது ஒரு குறிக்கோளைப் பெற்றுள்ளது. தாளின் ஒரு பக்கத்தில் இவ்வாறு உடைப்பதன் மூலமாக, வரிகள் முரட்டுத்தனமான, பிணைப்பற்ற தாக்கத்தை மாபெரும் விடுபடலுக்குள் எறிகிறது. வரிகள் ஒவ்வொன்றும் எளிதில் கோபமடைகிற பலத்த அடியுடன் முடிவுக்கு வருவது போலத் தோன்றுகிறது. ஒவ்வொரு வரியும் இறுதியில் ஒரு மாறுபாட்டை இழைப்பதால், அவற்றிற்கு இடையில் இணைப்போக்கு உள்ளது. இந்த இயந்திரப்பூர்வத் திரும்ப நிகழ்தல் உணர்வு பேசுபவரின் உணர்வுப்பூர்வ வெறுமை நிலையை அதே போல அவருடைய பாலுணர்வுக் கோபத்தையும் கைப்பற்றுகிறது.
இந்தத் திரும்ப நிகழ்தல், கவிதை விளைவுகளின் மற்றொன்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அது அதன் எரிச்சலுட்டக்கூடிய தன்மையாக இருந்தாலும், சற்று வேடிக்கைமிக்கதாக உள்ளது. அதன் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு எனும் நேரடித்தன்மை, தகுதிப்பாட்டிற்கான அல்லது விவரணைக்கான அதன் காளைத் தலை மூர்க்கத்துடன் கூடிய மறுதலிப்பு, இளவரசி ஆனேவின் நாற்காலி மீது யாரோ தானிய உமியை உறித்துப் போட்டதைக் கண்டு அஞ்சாதது போல நம்மை நகைக்க வைக்கிறது. கவிதையின் அதீதம் குறித்த முரண்நகையான வேடிக்கை சில உண்டு. அது உணர்வுகளின் துல்லியமான சிக்கல்களிலிருந்து ஒரு தற்காலிக விடுபடலை அனுபவிக்க நம்மை அனுமதிக்கிறது. நாம் கோழைத்தனம்மிக்க மனிதராக இல்லாதிருந்தால் மட்டும், இது நமக்காக நாம் உள் நுழையத் தூண்டும் ஒரு வகையான மூர்க்கத்தனமான வெளிப்படைத் தன்மையாக இருக்கும். வரிகள் அற்புதமான முறையில் தெளிவாக உள்ளன. உண்மையில், அந்தப் பகுதியில் உள்ள நகைக்க வைக்கக்கூடிய, அதே சமயத்தில் வெறுப்பூட்டக்கூடிய நிதர்சனம், அதன் தனித்தன்மை வாய்ந்த உணர்வுப்பூர்வமான தாக்கத்தின் ஒரு அங்கமாக உள்ளது. மிருதுவான உணர்வுகளின் கொடிய நிராகரிப்பில் அது அதிதீவிரமாக இருந்தால், அது தன்னை வேடிக்கை காட்டக்கூடியதாகவும் கூட, அல்லது குறைந்த பட்சம் அதன் சுய எரிச்சலூட்டும் தன்மை குறித்த வஞ்சப் புகழ்ச்சிமிக்க புரிதல் உள்ளதாகவும் கூடிய உணர்வு அங்கு இருக்கும். அழுத்தமான பல்லவியான, ‘நான் பெறவில்லை’, ‘நீங்கள் பெறவில்லை’, ‘நாம் பெறவில்லை’, ‘நம்மில் யாரும் பெறவில்லை’ என்பவை ஆழமான புரிதிறன்மிக்க, நகைச்சுவையான வெளிப்பாடு. அது வேடிக்கை மிகுந்த புதிர்த்தனமான குரலைப் பெற்றுள்ளது. கவிஞன் தனது சுய எரிச்சலூட்டும் தன்மையிலிருந்து சற்றே விலகி இருப்பது போல அந்த வார்த்தை விளையாட்டு வெளிப்படுகிறது.
ஒரு கோமாளித்தனமான நகைச்சுவை முகத்தில அறைவது போன்ற ஒரு வரியை வழங்க இருப்பது போல, முதல் ‘பெறுதல்’ எனும் வார்த்தைக்குப் பிறகு ஒவ்வொரு வரிக்கு மத்தியிலும் சுருக்கமான, எதிர்பார்ப்பு மிகுந்த ஒரு கிளர்ச்சியூட்டும் இடைவெளி இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. (ஆங்கில கவிதைகளில், வேறு சில வகைக் கவிதைகளுக்கு மாறாக, வரியின் ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு இடைவெளி இருக்கும்). ஒவ்வொரு வரியும் இந்த அர்த்தத்தில், பேச்சாளர் யாரை நோக்கி உரை நிகழ்த்துகிறாரோ அவரிடமிருந்து சமுக்காளத்தைக் கொடூரமாக இழுக்கின்ற ஒரு சிறு நாடகம். ‘நீங்கள் பெற்றுள்ளதாக நீங்கள் கூறும் உணர்ச்சிகள்’ எனும் வார்த்தைகளில் பேசும் குரல் ‘நீங்கள் பெறவில்லை’ எனும் வார்த்தைகளின் நிதர்சனமான சமச்சீரான தன்மைக்குள் அமிழ்த்திச் சிதைப்பதற்கு மட்டும் குறிப்பாக உயர்வதைக் கற்பனை செய்து பார்க்க முடியும். அது முறையான ஆங்கிலத்தில் மிக வெற்றிகரமாக ஒலிவயப்படுத்தக்கூடிய ஒரு வகைத் துணுக்கு அல்ல. அதில் லாரன்ஸின் சொந்த வட்டாரப் பேச்சு வழக்கைப் பரிந்துரை செய்யும் மொழி பற்றிய அம்சங்கள் நிறைய உள்ளன.
எனவே, உரைநடை வடிவில் உள்ள கவிதையுடன் அது ஏன் பொருந்துகிறது என்பதைக் காண முடியும். அது கவிதையும் கூட, ஏனென்றால் அது ஒரு ‘தார்மீக’ அறிக்கை, ஒரு தருணத்தில் நாம் சோதனைக்குட்படுத்தும் ஒரு கருத்து. இந்தக் கருத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். எனினும், கவிதையின் வரிகள் சற்று கவித்துவத்தின் வழக்கமான முத்திரையுடன், அவை அதற்கு அப்பாலும் பிரவகிக்க முடிவது போல, ஒரு பொதுத் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த எல்லை வரை கவிதையின் வடிவம் அதன் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கிறது. அதன் சுயப் பிரக்ஞையுடன் கூடிய கடினமாக வெளிப்படுத்தும் போக்கு அதன் உள்நோக்கத்துடன் கூடிய கலையற்ற மொழியின் வழியாக, கடினமான உடனடித் தன்மையுடன் வெளிப்படும் உணர்வுகளை நவீனத்துவப் பாணிக்குள் வகைமைப்படுத்துகிறது.
தமிழில்: மோகன ரவிச்சந்திரன்