1980-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் விருது பெற்ற ஸெஸ்லா மிலோஸ் தம்மை ஒரு போலந்துக் கவிஞராக அறிமுகப்படுத்திக் கொண்டாலும், அவர் போலந்தில் பிறந்தவரல்ல, போலந்தில் அதிக காலம் வாழ்ந்தவருமல்ல. ஆனால் போலந்து மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டவர். 1911-ல் லிதுவேனியாவில் பிறந்த ஸெஸ்லா மிலோஸ் லிதுவேனியாவை புராணிகம் மற்றும் கவிதையின் தாய்நாடு என்று வர்ணித்தார். அவருடைய குழந்தைப் பருவம் முதலாம் உலகப் போரால் சிதைந்து போனது. சாலைப் பொறியாளரான அவருடைய தந்தையை ஜார் ராணுவத்தில் சேர்க்கபட்டதால் அவரும் அவருடைய தாயும் ரஷ்யப் போர்த் தளங்களுக்கு அருகில் வசிக்க நேர்ந்தது.
1918-ல் லிதுவேனியாவுக்குத் திரும்பியது அவர் குடும்பம். அங்கு பல வருடங்கள் தன் இளமைக்காலத் தனிமையை அனுபவித்தார் ஸெஸ்லா மிலோஸ். ஆரம்பகாலப் படிப்பை வில்னியஸில் கற்றார். 20 வயதில் முதல் கவிதைத் தொகுப்பான “உறைந்து போன நாட்கள் பற்றிய கவிதை” நூலை வெளியிடுகிறார். “மூன்று வசந்தங்கள்” அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு 1936-ல் வெளியானது. ஸெஸ்லா மிலோஸ் சட்டம் பயின்ற பின் ஒரு வருட காலத்தை பாரீஸில் கழித்தார். அங்கு தனது உறவினரும் ஃப்ரென்ச் கவிஞருமான ஆஸ்கார் மிலோஸை சந்திக்கிறார். அவரைத் தனது ஆசானாக ஏற்றுக் கொள்கிறார் ஸெஸ்லா மிலோஸ்.
வில்னியஸில் இருந்த சோவியத் படைகள் ஸெஸ்லா மிலோஸை தனது இளமைக்கால நகரை விட்டு நாஸி ஆக்ரமித்த வார்ஸாவுக்குத் துரத்தியது. அங்கு அவர் சோசலிஸப் போராட்டக் குழுவில் இணைந்தார். தனது எதிர்-நாஸிக் கவிதைத் தொகுப்பான ”வெல்வதற்கரிய பாடல்” தொகுப்பை வார்ஸாவில் தலைமறைவாக இருந்து வெளியிடுகிறார். அங்கு “உலகம்” என்ற விடலைப்பருவக் கவிதை மற்றும் “ஏழைகளின் சுழல் குரல்கள்” படைப்புகளையும் எழுதினார். வார்ஸாவின் வீழ்ச்சிக்குப் பின் க்ராக்கோவில் சில காலம் வசித்தார். அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு “மீட்சி” மாநில வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
போர்களின் முடிவு அவருக்கு மேலும் பல இடப்பெயர்வுகளைக் கொண்டு வந்தது. போலந்து கம்யூனிச அரசில் கலாச்சார ஆலோசகராக நியூயார்க்கிலும் வாஸிங்டனிலும் பணியாற்றினார். 1951-ல் போலந்து அரசுடனான உறவை முறித்துக் கொண்டு, ஃப்ரான்ஸில் அரசியல் அடைக்கலம் புகுந்தார். அது போலந்து வாசகருடனான இணைப்பைத் துண்டிக்கவும் காரணமானது. ஃப்ரான்ஸில் பத்து வருடங்கள் உறுதியான சோசலிஸக் கம்யூனிச அறிவுஜீவிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார். அந்தக் காலகட்டத்தில் ஸெஸ்லா மிலோஸ் இரண்டு நாவல்களை எழுதுகிறார். ஆதிக்கத்தைக் கைப்பற்றுதல் மற்றும் இஸா பள்ளத்தாக்கு. அதே சமயத்தில் தனது புகழ் பெற்ற சிறைப்பட்ட மனது நூலை எழுதுகிறார். அராஜகச் சிந்தனைக்கான ஒரு அபாயகரமான விண்ணப்பத்தை அந்த நூலில் ஆய்வு செய்கிறார் ஸெஸ்லா மிலோஸ். போலந்தில் அவருடைய நூல்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் பாரீஸில் அவை வெளியிடப்பட்டன.
ஸெஸ்லா மிலோஸ் மேலும் மேற்கு நோக்கி இடம் பெயர்கிறார். 1961-ல் தனது ஐம்பதாவது வயதில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஸ்லாவிக் மொழியியல் மற்றும் இலக்கியப் பேராசிரியராகத் தனது புதிய பணியைத் தொடங்கினார். ஒரு சிறிய துறையின் அறியப்படாத உறுப்பினராக இருந்தாலும், தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளைப் பயிற்றுவித்து புகழ் பெற்றார் ஸெஸ்லா மிலோஸ். 1973 வரை அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கிலத்தில் வெளியாகவில்லை. 1978-ல் வசந்தகால மணிகள் வெளியானது. 1980-ல் இலக்கியத்திற்கான நோபல் விருது அவருக்கு வழங்கப்படுகிறது. 1981-ல் முப்பது வருடங்களுக்குப் பிறகு போலந்து செல்கிறார். 1992-ல் 52 வருட இடைவெளிக்குப் பிறகு தனது தாய்நாடான லிதுவேனியா செல்கிறார்.
பல நாடுகளின் விமர்சகர்களும், ஜோசப் பிராட்ஸ்கி போன்ற சமகாலக் கவிஞர்களும் அவருடைய இலக்கிய ஆளுமையைத் தெளிவுபடுத்தினார்கள். ஸெஸ்லா மிலோஸின் கவிதை காட்சி-குறியீட்டு உருவகத்திற்குப் பெயர் பெற்றது. முட்டாள்தனமும் வெளிப்படைத் தன்மையும் அவருடைய கவிதையில் ஊடுபாவென இணைந்திருக்கும். தத்துவார்த்தத் திடுக்கிடலை அவருடைய கவிதை ஒரு சொல்லாடலாகத் தோலுரித்துக் காட்டிவிடும்.
ஸாகரி என்ற இலக்கியக் குழுவின் இணை-நிறுவனர் ஸெஸ்லா மிலோஸ். 1930-களின் வில்னியஸின் விதிவசக் கோட்பாட்டாளர்களின் சந்திப்பு மையமாக இருந்தது ஸாகரி. அது கூர்மையான உணர்வு மட்டுமல்ல முப்பதுகளின் பதட்டம் நிறைந்த அரசியல் சூழலையும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளையும் உள்வாங்கவும் அது தூண்டியது. இந்தக் கோட்பாடு நிகழ இருந்ததைப் பற்றிய திடமான உணர்வை அடிப்படையாகக் கொண்டது. அவருடைய படைப்புகள் முழுவதும் மனோதத்துவக் கூறுகளின் ஆழ்ந்த புரிதல் தொடர்ந்து இழையோடிக் கொண்டிருக்கும்.
விஞ்ஞானம் மற்றும் ஆன்மிகம், நல்லது மற்றும் தீயது, மதரீதியான நம்பிக்கைகளுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட பலவீனமானதின் உயிர்த்தெழல் மற்றும் உயிரினங்களின் தோற்றம் ஆகிய தளங்களின் பார்வைகளுக்கு மத்தியில் முரண்பாடுகளைக் குறிப்பிடுவதற்காக அவருடைய பன்முகத் தன்மையை அவர் தக்க வைத்துக் கொண்டார். இயற்கை அனுபவத்தை மேன்மை நிரம்பிய மகிழ்ச்சியின் தருணமாக விவரிக்கும் பொழுது, இயற்கையின் பெளதிக அழகை நுட்பமாக அவதானிக்கிறார் ஸெஸ்லா மிலோஸ். ஸெஸ்லா மிலோஸ் ஆகஸ்ட் 2004-ல் தனது 93-ஆவது வயதில் போலந்தில் மரணமடைந்தார்.
ஸெஸ்லா மிலோஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகள்:
சூரியன்
அனைத்து வண்ணங்களும் சூரியனிலிருந்து தோன்றுகின்றன.
அதனிடம் ஒரு குறிப்பிட்ட வண்ணம் இல்லை.
வண்ணங்களை அது உள்ளடக்கியுள்ளது.
ஆகாயச் சூரியன் ஒரு ஓவியனைப் பிரதிநிதித்வம் செய்யும் பொழுது
ஒட்டு மொத்த பூமியும் ஒரு கவிதை போன்றது.
பல நிறம் கொண்ட பூமியை யார் வரைவதாக இருந்தாலும்
அவர் சூரியனை நேரடியாகக் காண அனுமதிக்க வேண்டாம்
இல்லையெனில் அவர் கண்ணுற்ற நினைவுகளை இழக்க வேண்டியதிருக்கும்.
வெப்பக் கண்ணீர்த் துளிகள் மட்டும் அவர் கண்களில் எஞ்சி இருக்கும்.
அவர் முழந்தாளிட்டு, புற்களிடம் முகம் தாழ்த்தி
நிலம் பிரதிபலிக்கும் ஒளியை உள்வாங்க வேண்டும்.
அங்கு நாம் இழந்த ஒவ்வொன்றையும் அவர் காண்பார்;
நட்சத்திரங்கள், ரோஜாக்கள், அந்திவேளைகள் மற்றும் விடியல்கள்.
<||||||||>
நம்பிக்கை
உங்களிடம் நம்பிக்கை துளிர்க்கிறது
ஒரு பனித்துளியை அல்லது மிதக்கும் இலையைக் காணும் பொழுது,
அவற்றின் இருத்தல் நிலையால் அவை இருக்கின்றன
என்பதை உணரும் பொழுது.
நீங்கள் கண்களை இறுக மூடினாலும்
கனவு காண்பதாக இருந்தாலும்
உலகம் எப்பொழுதும் உள்ளது போல இருக்கும்.
நதிநீர் இலையைச் சுமந்து செல்லும்.
நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்
ஒரு கூர்மையான பாறை மீது
உங்கள் பாதங்களை மோதிக் காயப்படுத்தும் பொழுதும்,
நமது பாதங்களைக் காயப்படுத்தவே
அந்தப் பாறைகள் இருக்கின்றன என்பதை
உணரும் பொழுதும்.
மரத்தால் கிடத்தப்பட்ட நீண்ட நிழலைப் பாருங்கள்?
நாமும் பூக்களும் நிலத்தின் மீது
நிழல்களை வீசுகிறோம்.
நிழல்கள் இல்லாதவை வாழ வலிமை இல்லாதவை.
<||||||||>
இறைநிலை
என் இனிய இறையியலாளர்களே அது சாத்தியமில்லை.
கடவுளின் அறநிலையை ஆசை காப்பாற்றாது.
நல்லது தீயதுக்கு இடையில்
தெரிவு செய்யக்கூடிய உயிர்களை அவர் உருவாக்கினால்,
அவை தெரிவு செய்து, உலகம் தீயதில் திளைக்கிறது.
ஆயினும் வலியும்
உயிரினங்களின் கொடிய சித்ரவதைகளும் அங்கு இருக்கின்றன.
ஆதிகால சுவர்க்கத்தின் தோற்றத்தை ஊகிப்பதன் மூலம்
அதன் விளக்கத்தை அவை கண்டறிகின்றன.
ஆதி-மானுட வீழ்ச்சி மிகக் கடுமையானது.
தீய சக்தியிலிருந்து அதன் இயல்பைக் கிரகித்தது உலகம்.
<|||||||||>
எதிர்பாராத சந்திப்பு
விடியலில் ஒரு வாகனத்தில் வயல்வெளிகளின் வழியே பயணித்தோம்.
மெல்லிருட்டில் ஒரு சிவப்புநிறச் சிறகுவெளி உயர்ந்தது.
திடீரென ஒரு முயல் சாலையின் குறுக்கே ஓடியது.
எங்களில் ஒருவர் தன் கரங்களால் அதைச் சுட்டிக் காட்டினார்.
நீண்ட காலத்திற்கு முன் நிகழ்ந்தது. இன்று யாரும் உயிருடன் இல்லை,
முயலும் இல்லை, சைகை செய்த அந்த மனிதனும் இல்லை.
ஓ என் அன்பே, அவை எங்கே, எங்கே செல்கின்றன
ஒரு கரத்தின் மின்வெட்டொளி, இயக்கத்தின் கீற்று, கூழாங்கற்களின் சலசலப்பு.
வருத்தத்தினால் அல்ல, வியப்பினால் கேட்கிறேன்.
<|||||||>
மந்திர உச்சாடனம்
மானுட தர்க்கம் அழகானது, வெல்ல முடியாதது.
கம்பிச் சட்டகங்கள் இல்லை, முள்வேலி இல்லை, புத்தகக் கூழ் இல்லை,
அதற்கு எதிராக எந்த வெளியேற்ற தண்டனையும் மேலோங்க முடியாது.
பிரபஞ்சக் கருத்துகளை அது மொழியில் நிறுவுகிறது,
உண்மையையும் நீதியையும் பெரிய எழுத்துகளிலும்
பொய் மற்றும் ஒடுக்குதலை சிறிய எழுத்துகளிலும்
எழுத ஏதுவாக
நமது கரங்களை வழிநடத்துகிறது.
அனைத்துக்கும் மேலாக என்ன இருக்க வேண்டுமோ
அவற்றைப் போல அது நிலைப்படுத்துகிறது.
அது விரக்தியின் எதிரி, நம்பிக்கையின் நண்பன்.
நிர்வகிக்க நிலத்தை வழங்கும் அதற்கு கிரேக்க யூதர் தெரியாது அல்லது
ஆண்டான் அடிமை தெரியாது.
சித்ரவதைக்குள்ளான வார்த்தைகளின் இழிவான முரண்பாட்டிலிருந்து
கடுமையான, வெளிப்படையான சொற்றொடர்களை
அது பாதுகாக்கிறது.
சூரியனுக்குக் கீழ் அனைத்தும் புதிது என்று கூறுகிறது.
கடந்த காலத்தின் திடமான முஷ்டியைத் திறக்கிறது.
அழகு மற்றும் இளமை நிரம்பியவை பிலோ-ஷோபியாவும்
சிறந்த சேவையுணர்வு கொண்ட அவள் உற்ற தோழியான கவிதையும்.
நேற்றைப் போல மிகத் தாமதமான இயற்கை
அவற்றின் பிறப்பைக் கொண்டாடியது.
ஒற்றைக் கொம்புடைய புராணிகக் குதிரையாலும்
ஒரு எதிரொலியாலும்
அந்தச் செய்தி மலைகளுக்குக் கொண்டு வரப்பட்டது.
அவர்களுடைய நட்பு உன்னதமானது,
அவர்களுடைய நேரம் எல்லையற்றது.
அவர்களுடைய எதிரிகள்
தங்களைத் தாங்களே அழிவிற்குட்படுத்திக் கொண்டார்கள்.
<||||||||||||>
வரலாற்றுப் பதிப்பு
என் மூடத்தனத்தின் வரலாறு பல தொகுதிகளை நிரப்பக் கூடியது.
பிரக்ஞைக்கு எதிராகச் செயல்பட சிலர் அர்ப்பணிப்பார்கள்
ஒரு விட்டில் பூச்சியின் ஒளி போல, அதற்குத் தெரியுமா,
மெழுகுவர்த்தியின் சுடரை நோக்கியே அது பறக்கும்.
வேறு சிலர் மெளனமான பதட்டத்திற்கான வழிகளைக் கையாள்வார்கள்.
ஒரு எச்சரிக்கையாக இருந்தாலும், சிறு விசும்பல் புறக்கணிக்கப்படுகிறது.
நான் நிறைவையும் பெருமையையும் தனித் தனியாகக் கையாள்வேன்.
வெற்றிகரமாக, ஐயப்பாடில்லாமல் ஈர்க்கின்ற
அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு மத்தியில் ஒருவனாக இருந்த காலம்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே உள்ளீட்டைக் கொண்டவர்கள், ஆசை.
எனக்குச் சொந்தமாக மட்டும் இருந்தால் – ஆனால் இல்லை,
எப்பொழுதும் இல்லை; அய்யகோ,
நான் உந்தப்பட்டேன், ஏனெனில் நான் மற்றவர்களைப் போல
இருக்க விரும்பினேன்.
எனக்குள் மிருகத்தனமாக, அநாகரிகமாக இருந்தவை பற்றி
நான் அச்சம் கொண்டேன்.
என் மூடத்தனத்தின் வரலாறு எழுதப்படக் கூடாது.
ஆனால் ஒன்று, அது மிகத் தாமதமானது.
உண்மை வலி மிகுந்தது.
<|||||||||||>
நன்றி: புது எழுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக