உன்னை மீண்டும் சந்திப்பேன்
எவ்வாறு எங்கே? தெரியாது
ஒரு வேளை நான் உனது கற்பனையின்
மாயத்தோற்றம் ஆகக்கூடும்
மேலும் உன் ஓவியப்படுதாவில்
என்னை ஒரு மாயக்கோடாகப் பரப்பலாம்.
உன்மீது என் பார்வையைக் கிடத்தியபடி இருப்பேன்.
ஒரு வேளை நான் ஒரு சூர்யக் கிரணமாகக்கூடும்,
உன் வண்ணங்களால் தழுவப்பட ஏதுவாக.
உன் ஓவியப்படுதாமீது என்னைத் தீட்டிக் கொள்வேன்.
எவ்வாறு எங்கே என்று எனக்குத் தெரியாது –
உறுதியாக உன்னைச் சந்திப்பேன்.
நான் ஒரு வசந்தமாக மாறக்கூடும்,
உன் உடல் மீது
நீரின் நுரைத்துளிகளைத் தேய்த்து,
உன் தகிக்கும் மார்பை
என் நீர்மையால் தணிப்பேன்.
எனக்கு வேறொன்றும் தெரியாது
இந்த உயிர்ப்பு என்னுடன் வரும் என்பது தவிர.
இந்த உடல் அழியும் பொழுது,
அனைத்தும் அழிந்து போகும்;
ஆனால் இந்த நினைவின் நூலிழைகள் மட்டும்
நீடித்த புள்ளிகளுடன் நெய்யப்படும்.
இந்தத் துகள்களைத் திரட்டி,
இழைகளை நெய்வேன்.
உன்னை மீண்டும் சந்திப்பேன்.
<||||||||||||||||||>
தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக