வியாழன், 27 மே, 2021

சில அவதானிப்புகளின் பதிவுகள் - ஜோசப் பிராட்ஸ்கி


சில அவதானிப்புகளின் பதிவுகள். ஒரு திரும்புதல் பரப்பில்

அது வெதுவெதுப்பாக இருக்கிறது.

ஒரு பார்வையிடல் பதிந்த இடத்தில்

ஆழ்ந்த குறியிடலை விட்டுச் செல்கிறது.

நீர் என்பது கண்ணாடியின் அதீதத் திறந்த வடிவம்.

மனிதன் என்பவன் புறத்தோற்றத்தை விட

அதிக அச்சுறுத்தல் தருபவன்.

எங்கும் இல்லாத குளிர்கால மாலைநேரம்

ஒயினுடன் இருக்கிறது.

ஒரு கரிய தாழ்வாரம்

ஓசியர் புதரின் கடுந்தாக்குதல்களை எதிர்த்து

நிலை கொள்கிறது.

முழங்கை மீது பொருத்தப்பட்ட உடல்

ஒரு பனிப்பாறை உடைவுகளின்

ஒருவித மண் குவியல் போல் நிறைகிறது.

எனவே

ஒரு ஜன்னலின் சுழல் அச்சுக்கு

இரவு வணக்கத்தை முணுமுணுத்தபடி

விளிம்புப் பதிவின் கீழ்

உதட்டு முத்தங்களுடன்

இந்த மெல்லிய வலைத்துணிக்குப் பின்புறம்

ஒரு புதைபடிவச் சிப்பி நிலை கொண்டதை

ஒரு ஆயிரம் ஆண்டு காலத்திற்கு

அவை விவரிக்கப் போவதில் சந்தேகமில்லை.


-/||||||||||||||||||||||||\-


தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்

உடலின் சிதிலம் - மேக்ஸ் ரித்வா

 


 

இன்று நான் என் உடலிலிருந்து எழுந்தேன்

இனி நான் அந்த உடலாக இருக்கப் போவதில்லை.

 

அது என் நாயை விட மேலானது –

மற்ற உறுப்புகளுக்கு ஒத்திசைவாக இருந்தது,

எனக்கு வெதுவெதுப்பைத் தந்தது

நான் அதை பொன்மீனாக நழுவவிட்ட போது

அல்லது வாட்டிய பொழுது,

 

ஆயினும் அது துளிகளாய்ச் சிந்துகிறது.

எளிமையான அமர்வாக, இருத்தலாக, திரும்புதலாக

கடந்த காலத்தைப் பெற முடியாது.

முழுமையாக இல்லாவிடினும்

லெளகீகத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்தது.

 

அதனால் இது விடைபெற வேண்டிய தருணம் என்று

அர்த்தமல்ல.

 

பிரிவு தற்காலிகமானது என்பதை உணர்ந்தேன்

மேலும் என் சுய நலனுக்காக:

 

செங்கற்களாகவும் குச்சிகளாகவும் உலகை உடைக்கும்

என் உடலின் செயல்

உள்வயமாகத் திரும்பியது.

 

உலகின் அனைத்துக் கதவுகளும்

மிக அதிக வலுவாக வளர்வது போல்

ஒரு மிகப் பெரிய வெள்ளைப் படுக்கை

என் இதயத்தில் விரிக்கப்படுகிறது.


-/||||||||||||||||||||||\-


மனோதிட இருத்தலும் நொறுங்கிப் போவதும்


ஏர்னஸ்ட் மெய்ஸ்டர் (Ernst Meister) (செப்டம்பர் 3, 1911 – ஜூன் 15, 1979) ஜெர்மானிய கவிஞர், எழுத்தாளர். மெய்ஸ்டரின் கவிதை இருத்தலியலின் இருண்ட அருவமான நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டது. 1976 ஆம் ஆண்டு எழுதிய கவிதைத் தொகுப்பில், Im Zeitspalt ("In Time's Rift"), மெய்ஸ்டர் வெளிப்படையாக மரணம் மற்றும் இருத்தலின் ஒன்றுமில்லாத தன்மை பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்.

ஒரு "மோசமான நிர்வாண" கவிஞராக மாறிய தத்துவவாதி கவிதை வடிவில் தத்துவத்தைத் தொடர முடிவு செய்தால் என்ன ஆகும்? சுவரற்ற அண்டவெளி நூலில் இது ஏர்னஸ்ட் மெய்ஸ்டரின் பணி. ஒரு கடினமான கவிதை வெற்றிடத்தில் மரணம், சிதைவு மற்றும் இருத்தலை ஆராய்வதற்கான கவிதைகளின் ஒரு கடினமான புத்தகம்.

புத்தகத்தில் மூன்று பகுதிகள் - மொத்தம் ஐம்பத்து ஏழு தலைப்புகளில், ஒவ்வொன்றும் பதினைந்து குறுகிய வரிகளுக்கு மேல் இல்லாதவைகளாக இடம் பெறுகின்றன. இதில் ஹெடெக்கர், ஹெகல் மற்றும் நீட்சேயின் தத்துவத்தை ஆராய்ந்திருக்கிறார்.

ஹெடெக்கரியச் சொற்களைக் கையாள்வதன் காரணமாக, இந்தக் கவிதைகளின் சொற்றொடர் காலம், ஆன்மா, பூமி, வாழ்வு, வெறுமை, மனிதத்தன்மை, நித்தியத்துவம், மற்றும் இருத்தல் போன்ற அருவமான சொற்களின் ஒரு வரையறுக்கப்பட்ட கலவையாகும். உதாரணமாக, தொகுப்பில் உள்ள ஒரு கவிதை அதன் தலைப்பைச் சித்தரிக்கிறது:

 

மனோதிடத்துடன் இருத்தல்

அல்லது நொறுங்கிப் போவது

அனைத்தும் ஒன்றுதான் இந்தப் பிரபஞ்சத்தில்.

 

ஒன்றுமில்லை என்பது இருக்கிறது

வெறுமையின்

விளிம்பை அடைய.

 

அந்த விளிம்பும் அங்கு இல்லை.

இருக்கிறது

என்றால் என்ன

 

அண்டவெளியின்

சுவரற்ற கொள்கலனில்

நிறைத்தது எதை, வெளியேற்றியது எதை.

 

இங்கே அதன் முழுமையை விவரித்த கவிதை இந்த தொகுப்பில் உள்ள மற்ற கவிதைகளுக்கு முன்மாதிரி. குறிப்பாக இது மிகவும் வெளிப்படையான கவிதை – திரும்பக் கூறுதல் தன்மை கொண்டது. ஆனால் அவர் ஒலித்தல் விளைவுக்காக மட்டும் இதை செய்யவில்லை. மாறாக, அவரது நோக்கம், ஒரு மையமான முரண்பாட்டின் தொடர்ச்சியான ஆய்வில் மொழி மற்றும் கருத்தாக்கங்களைச் சுருக்குவது தான். இந்த நூலின் மூன்றாவது பகுதியின் பத்தாவது கவிதை:

 

அதீதமானது மற்றும் கடினமானது

எதுவெனில்

 

சிந்திப்பது

இங்கு இருத்தல் அல்ல.

 

ஒருவரின் பிரக்ஞை

சாவதை அறிவது எவ்வாறு,

 

அதன் எதிர்நிலைகளிடம்

சரணடைவது எவ்வாறு?

 

மேலே உள்ள கவிதையில், Wallless Space நூலில் உள்ள மற்ற கவிதைகளில் போல, வெறுமை என்பது சிந்தனையைத் தடுக்கும் ஒரு இருத்தல்நிலை என்றாலும், மரணத்தின் வெறுமை குறித்து விவரிக்க மொழியைப் பயன்படுத்துகிறார் மெய்ஸ்டர்.

இவரது கவிதை, மாற்று வரிவடிவம் மற்றும் கடினமான தொடரியலுக்காகக் குறிப்பிடத்தக்கது. மெய்ஸ்டரின் சமகாலத்தவரான ருமேனிய கவிஞர் பால் செலனின் (1920-1970) ஜெர்மன் எழுத்துக்களுடன் இவர் எழுதிய படைப்புகள் ஒப்பிடப்பட்டுள்ளன. 16 கவிதைத் தொகுப்புகளை எழுதினாலும், மெய்ஸ்டர் இலக்கிய உலகில் பிரபலமடையவில்லை. அவரது படைப்புகள் அவரது வாழ்நாளில் ஒப்பீட்டளவில் அறியப்படாதவையாகவே இருந்தன.


-/||||||||||||||||||||||||\-



லூயி கிளக் கவிதைகள்


 

சித்திரம்

 

ஒரு உடலின் கோட்டுருவத்தை வரைகிறது குழந்தை.

அவளால் இயன்றளவு வரைகிறாள்,

ஆனால் அது முற்றிலும் வெள்ளையாய்த் தெரிகிறது,

உடலில் உள்ளதை அவள் அறிந்தவாறு

அவளால் சித்திரத்தில் உட்புகுத்த முடியவில்லை.

உறுதிப்படுத்த முடியாத கோட்டுருவத்தினுள்,

வாழ்வு இல்லாமல் போவதை அவள் அறிகிறாள்;

ஒரு பின்புலக் காட்சியை

மற்றொன்றிலிருந்து துண்டித்தாள்.

ஒரு குழந்தையைப் போல,

அவள் தன் தாயின் மடி புகுந்தாள்.

 

அவள் உருவாக்கிய அந்த வெற்றிடத்திற்கு எதிராக

நீங்கள் அந்த இதயத்தை வரைகிறீர்கள்.

-/|||||||||||||||||||||\-



குதிரை

 

என்னால் தர முடியாத எதை

அந்தக் குதிரை உனக்குத் தருகிறது?

 

நீ தனிமையில் இருப்பதை அவதானிக்கிறேன்,

பால்பண்ணைக்கு அடுத்துள்ள வயல்வெளியில்

சவாரி செய்கையில்

உன் கரங்கள்

பெண்குதிரையின் கருஞ்சிகைக்குள் புதைந்திருந்தன.

 

அப்போது உன் மெளனத்தில் உறைந்திருப்பது

என்னவென்று அறிகிறேன்: இகழ்ச்சி,

என் மீதான, மணம் செய்தல் மீதான வெறுப்பு.

இன்னமும் நான் உன்னை ஸ்பரிசிக்க வேண்டுமென

நீ விரும்புகிறாய்; அழுது தீர்க்கிறாய்

மணப்பெண்களைப் போல, ஆனால்

நான் உன்னை

உற்றுப் பார்க்கும் பொழுது

உன் உடம்பில் ஒரு குழந்தையும் இல்லை

என்பதைக் காண்கிறேன்.

பிறகு அங்கு என்னதான் இருக்கிறது?

 

ஒன்றுமில்லை, என நினைக்கிறேன்.

அவசரம் மட்டும்

நான் இறப்பதற்கு முன் இறந்து போக.

 

ஒரு கனவில், வறண்ட வயல்வெளிகளில்

சவாரி செய்தபின்

குதிரையிலிருந்து நீ கீழே இறங்குவதைக்

காண்கிறேன்: இருளில்

நீங்கள் இருவரும் ஒன்றாக நடந்து வருகிறீர்கள்,

உங்களிடம் நிழல்கள் இல்லை.

ஆனால்

அவை என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன்,

இரவில் அவை எங்கும் செல்லலாம் என்பதால்.

அவை தம்மைத் தாமே ஆள்பவைகள்.

 

என்னைக் கவனி. எனக்குப் புரியவில்லை

என்று எண்ணுகிறாயா?

இந்த வாழ்வைக் கடந்து செல்லவில்லை என்றால்

என்ன மிருகம் அது?

-/|||||||||||||||||||||\-



பனித்துளிகள்

 

நான் என்னவாக இருந்தேன்எப்படி வாழ்ந்தேன்

உனக்குத் தெரியுமா?

விரக்தி பற்றி உனக்குத் தெரியும்;

அப்படியெனில், பனிக்காலம் உனக்காக

அர்த்தங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

 

நான் பிழைத்திருப்பேன் என எதிர்பார்க்கவில்லை,

நிலம் என்னை ஆள்கிறது.

 

ஈர நிலத்தில் திரும்ப எதிர்வினையாற்றும்

என் உடலை உணர்வதற்காக

நான் திரும்ப எழுவேன் என எதிர்பார்க்கவில்லை,

ஆதி வசந்தத்தின் சில்லென்ற வெளிச்சத்தில்

திரும்பத் திறப்பது எவ்வாறு என

வெகு நாட்களுக்குப் பிறகு

நினைவு கூர்ந்தபடி-

 

அச்சம், ஆம் உன்னோடு மீண்டும்

அழுகிறேன், ஆம் அச்சுறுத்தும் உன்மத்தம்

 

புதிய உலகின் அரிய காற்றில்.

-/||||||||||||||||\-



தோட்டம்

 

தோட்டம் உங்களை மெச்சுகிறது.

உங்களுக்காக அது பச்சை நிறமியாலும்

ரோஜாக்களின் பரவசச் சிவப்புகளாலும்

தன்னைக் கறைப்படுத்திக் கொள்கிறது.

அதனால் நீங்கள் உங்கள் காதலர்களுடன் வருகிறீர்கள்.

 

பிறகு இந்த வில்லோ மரங்கள்-

மெளனம் தோய்ந்த இந்தப் பச்சைக் கூடாரங்களை

எப்படி வடிவமைக்கின்றன என்பதைப் பாருங்கள்.

இன்னமும்

உங்களுக்கு வேண்டியவை இருக்கின்றன,

அந்தக் கல் விலங்குகளுக்கு மத்தியில்

மிக மிருதுவாக, மிக உயிர்ப்பாக உங்கள் உடல்.

 

ஒப்புக் கொள்ளுங்கள்

அவற்றைப் போல இருப்பது சற்று திகிலூட்டுவது

காயம்படுதலுக்கு அப்பால்.

-/|||||||||||||||||||||\-


தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்

புதுமைப் பித்தனின் “ஞானக் குகை” சிறுகதை அவிழ்க்கும் புதிர்கள் - மோகன ரவிச்சந்திரன்

புதுமைப் பித்தனின் “ஞானக் குகை” சிறுகதையை வாசிக்கத் துவங்கிய பொழுது வெகு எளிதாக இருந்தது. சொற் சிக்கல் இல்லாமல், காட்சித் தொடர்ச்சி சீராகவே இருந்தது. வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தொடரத் தொடர அவற்றின் வீச்சு பலவிதமான புதிர்களை நோக்கி இழுத்தது. கதை முடிவுற்ற இடத்தை ஒரு முடிவாகக் கொள்ள முடியாமல் மேலும் பக்கங்களைத் திருப்ப வேண்டியிருந்தது.

ஒரே மூச்சில் ஏழு பக்கங்களையும் வாசித்து முடித்தேன். வாசித்த பிறகு மனம் முற்றிலும் வேறு ஒரு நிலைமையில் பதைபதைக்கத் துவங்கி விட்டது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பல்வேறு பரிமாணங்களை அடைந்து ஒரு மிக நீண்ட காவியத்தன்மைக்குள் தள்ளியது.

சிறுகதைகளில் மிக முக்கியமாக சிலாகிக்கப்படுவது அதன் கட்டமைப்பு. இச்சிறுகதையில் உள்ள கட்டமைப்புக் கூறுகள் பிரமிப்பூட்டுவனவாக உள்ளன. முதலில் ஒரு சித்திரம் மிகத் தெளிவாக வரையப்படுகிறது. பின் அதன் தொடர்ச்சி கலைக்கப்பட்டு, பல்வேறு புதிர்களை நிரப்புகிறது. புற உலகிலிருந்து விடுபட்டு ஒருவிதமான அக உலகினுள் பயணத்தைத் தொடர்கிறது. கதாபாத்திரங்கள் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, அவற்றின் செயல்பாட்டுக் காட்சிகள் அதி நுட்பமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

’அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் கண்கள்’ என முதல் சில வரிகளிலேயே ஒரு பாத்திரத்தின் தன்மை முற்றிலும் விவரிக்கப்பட்டு விடுகிறது. கதையின் முடிவும் துவக்க வரிகளிலேயே நிறைவு பெறுகிறது. முதல், நடு, முடிவற்ற ஒரு பின்நவீனத்துவ வகைமை கையாளப்படுவதை உணர முடியும்.

பின்னர் இரண்டாம் பகுதியின் முடிவில் ஒரு மாய யதார்த்தம் செயல்படுத்தப்பட்டு, நிறைவுப் பகுதி நோக்கி விவரணை செல்கிறது. அறிவுநிலைக்கும் மூடத்தனத்திற்கும் இடையில் ஒரு மோதல் நிகழ்கிறது.    

விவரணை, பேச்சு, இயல்பு என ஊடாடும் சிலந்தி வலை போன்ற ஒரு கட்டமைப்பு ஏதோ ஒரு மையத்தை நோக்கி ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. விவரணைக் கூறுகள் வாசிப்பவனைப் பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்கின். ’ஸ்பரிசத்திலே புளகாங்கிதமடைந்த குழந்தையின் சிரிப்பு படிப்படியாக மறைந்தது. கண்களில் அறிவுச் சுடர் ததும்பியது’ என முன்பு மேற்கோளிட்ட வரிகளுக்கு எதிர்நிலையை விவரித்து அதிர்விக்கிறது.  

நேர் கோடுகள், குறுக்குக் கோடுகள் மற்றும் சாய்நிலைக் கோடுகளால் கட்டமைப்பின் செயல்தளம் எட்டப்படுகிறது. அதே போல, வலிமை மற்றும் உறுதிப்பாட்டை வலியுறுத்த நீள் சதுரக் கோணங்களைக் கொண்ட கோடுகளாலும் கட்டமைப்பு செயல்படுத்தப்படுகிறது. அதாவது அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் கண்களில் அறிவுச் சுடர் ததும்புகிறது.

இச்சிறுகதையில் கட்டமைப்பு உள்வயமாக மற்றும் புறவயமாக என இரண்டு நிலைகளிலும் செயல்படுகிறது. உள்வயமும் புறவயமும் ஒன்றை ஒன்று இயக்குகையில், உள்வயமான எதிர்நிலைகள் இரண்டும் பின்னிப் பிணைந்து அதிர்வுகளை உருவாக்குகின்றன. ஒரு குழப்பத்தை விளைவிப்பதன் மூலமாக ஒரு தெளிவை உருவாக்கும் உத்தி கையாளப்படுகிறது.

கதையின் மையமே கட்டமைப்பைத் தீர்மானிப்பதாக உள்ளது. மேலும் அது ஒழுங்கற்ற நிலையை வரிசைப்படுத்துவதற்கான ஒரு எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாகவும் உள்ளது.  வடிவத்தின் மீதான பிரக்ஞை ஒரு படைப்பாளரின் உயர்தரமான, இறுதியான ஒரு தன்மை என அழைக்கப்படுவதுண்டு. ஒரு ஏழு பக்கச் சிறுகதையில் இந்தச் செயல் ஆக்கப்பூர்வமான முறையில் சாதிக்கப்பட்டுள்ளது. சிறுகதைக்கான மேலும் சில கூறுகளாக அடித்தளம், உள்ளீடு, மையம், முரண், சூழல், பின்புலம் எனப் பல்வேறு நிலைகளை இதில் உள்வாங்க முடியும்.

மரபுரீதியான, ஒழுங்கான விவரணை இல்லாமல் உடைந்த கட்டமைப்பாகச் செயல்படுவதும் ஆக்கப்பூர்வமான விவரணை என பின்நவீனத்துவம் கூறுகிறது. காலவெளிகளைச் சிதைத்துவிட்டு, நிகழ்காலத் தருணங்களை விரிவுபடுத்துவதன் மூலம் நவீனக் கட்டமைப்பு செயலாற்றுகிறது. மேலும் அது இறுதித் தீர்மானங்களை உடைத்து விட்டு வாசிப்பவனை நிலை குலையச் செய்கிறது. 

அறிவு வென்றதா, மூடத்தனம் வென்றதா என்பது ஒரு பொருட்டல்ல. இரண்டும் அதனதன் போக்கில் எவ்வாறு சிறந்த எதிர்நிலைகளாகச் செயல்படுகின்றன என்பது கூட ஒரு சிறிதளவே மையத்தை நெருங்கியதாகக் கொள்ள முடியும். 

-/|||||||||||\-