சித்திரம்
ஒரு உடலின் கோட்டுருவத்தை வரைகிறது குழந்தை.
அவளால் இயன்றளவு வரைகிறாள்,
ஆனால் அது முற்றிலும் வெள்ளையாய்த் தெரிகிறது,
உடலில் உள்ளதை அவள் அறிந்தவாறு
அவளால் சித்திரத்தில் உட்புகுத்த முடியவில்லை.
உறுதிப்படுத்த முடியாத கோட்டுருவத்தினுள்,
வாழ்வு இல்லாமல் போவதை அவள் அறிகிறாள்;
ஒரு பின்புலக் காட்சியை
மற்றொன்றிலிருந்து துண்டித்தாள்.
ஒரு குழந்தையைப் போல,
அவள் தன் தாயின் மடி புகுந்தாள்.
அவள் உருவாக்கிய அந்த வெற்றிடத்திற்கு எதிராக
நீங்கள் அந்த இதயத்தை வரைகிறீர்கள்.
-/|||||||||||||||||||||\-
குதிரை
என்னால் தர முடியாத எதை
அந்தக் குதிரை உனக்குத் தருகிறது?
நீ தனிமையில் இருப்பதை அவதானிக்கிறேன்,
பால்பண்ணைக்கு அடுத்துள்ள வயல்வெளியில்
சவாரி செய்கையில்
உன் கரங்கள்
பெண்குதிரையின் கருஞ்சிகைக்குள் புதைந்திருந்தன.
அப்போது உன் மெளனத்தில் உறைந்திருப்பது
என்னவென்று அறிகிறேன்: இகழ்ச்சி,
என் மீதான, மணம் செய்தல் மீதான வெறுப்பு.
இன்னமும் நான் உன்னை ஸ்பரிசிக்க வேண்டுமென
நீ விரும்புகிறாய்; அழுது தீர்க்கிறாய்
மணப்பெண்களைப் போல, ஆனால்
நான் உன்னை
உற்றுப் பார்க்கும் பொழுது
உன் உடம்பில் ஒரு குழந்தையும் இல்லை
என்பதைக் காண்கிறேன்.
பிறகு அங்கு என்னதான் இருக்கிறது?
ஒன்றுமில்லை, என நினைக்கிறேன்.
அவசரம் மட்டும்
நான் இறப்பதற்கு முன் இறந்து போக.
ஒரு கனவில், வறண்ட வயல்வெளிகளில்
சவாரி செய்தபின்
குதிரையிலிருந்து நீ கீழே இறங்குவதைக்
காண்கிறேன்: இருளில்
நீங்கள் இருவரும் ஒன்றாக நடந்து வருகிறீர்கள்,
உங்களிடம் நிழல்கள் இல்லை.
ஆனால்
அவை என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன்,
இரவில் அவை எங்கும் செல்லலாம் என்பதால்.
அவை தம்மைத் தாமே ஆள்பவைகள்.
என்னைக் கவனி. எனக்குப் புரியவில்லை
என்று எண்ணுகிறாயா?
இந்த வாழ்வைக் கடந்து செல்லவில்லை என்றால்
என்ன மிருகம் அது?
பனித்துளிகள்
நான் என்னவாக இருந்தேன், எப்படி வாழ்ந்தேன்
உனக்குத் தெரியுமா?
விரக்தி பற்றி உனக்குத் தெரியும்;
அப்படியெனில், பனிக்காலம் உனக்காக
அர்த்தங்களைப் பெற்றிருக்க வேண்டும்.
நான் பிழைத்திருப்பேன் என எதிர்பார்க்கவில்லை,
நிலம் என்னை ஆள்கிறது.
ஈர நிலத்தில் திரும்ப எதிர்வினையாற்றும்
என் உடலை உணர்வதற்காக
நான் திரும்ப எழுவேன் என எதிர்பார்க்கவில்லை,
ஆதி வசந்தத்தின் சில்லென்ற வெளிச்சத்தில்
திரும்பத் திறப்பது எவ்வாறு என
வெகு நாட்களுக்குப் பிறகு
நினைவு கூர்ந்தபடி-
அச்சம், ஆம் உன்னோடு மீண்டும்
அழுகிறேன், ஆம் அச்சுறுத்தும் உன்மத்தம்
புதிய உலகின் அரிய காற்றில்.
தோட்டம்
தோட்டம் உங்களை மெச்சுகிறது.
உங்களுக்காக அது பச்சை நிறமியாலும்
ரோஜாக்களின் பரவசச் சிவப்புகளாலும்
தன்னைக் கறைப்படுத்திக் கொள்கிறது.
அதனால் நீங்கள் உங்கள் காதலர்களுடன் வருகிறீர்கள்.
பிறகு இந்த வில்லோ மரங்கள்-
மெளனம் தோய்ந்த இந்தப் பச்சைக் கூடாரங்களை
எப்படி வடிவமைக்கின்றன என்பதைப் பாருங்கள்.
இன்னமும்
உங்களுக்கு வேண்டியவை இருக்கின்றன,
அந்தக் கல் விலங்குகளுக்கு மத்தியில்
மிக மிருதுவாக, மிக உயிர்ப்பாக உங்கள் உடல்.
ஒப்புக் கொள்ளுங்கள்
அவற்றைப் போல இருப்பது சற்று திகிலூட்டுவது
காயம்படுதலுக்கு அப்பால்.
-/|||||||||||||||||||||\-
தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக