வெள்ளி, 28 மே, 2021

ஒரு சிம்பாலிசக் கவிதை

பொத்தி வைத்தலுக்காக

ஜாய் ஹர்ஜோ

 

சூரியன் அந்த தினத்தைப் புதிதாக்குகிறது.

சிறு பசுந்தாவரங்கள் மண்ணில் முளைக்கின்றன.

பறவைகள் வானத்தை ஒரு நிலைப்படுத்திப் பாடுகின்றன.

நான் எங்கும் இருக்க விரும்பவில்லை, ஆனால் இங்கே இருக்கிறேன்.

உன் இதயத் தாளகதியில் சாய்கிறேன்

அது நம்மை எங்கு அழைத்துச் செல்லும் என்பதைக் காண.

நாம் ஒரு வெதுவெதுப்பான, தென்திசைக் காற்றில் நுழைகிறோம்.

நான் என் கால்களை உன்னுடையவற்றுடன் இணைத்து,

ஒன்றாகச் சவாரி செய்கிறோம்,

நம் உறவுகளின் ஆதிமுகாம் நோக்கி.

எங்கே இருந்தீர்கள்? அவர்கள் வினவுகிறார்கள்.

எதனால் இவ்வளவு காலம்?

அன்றிரவு உண்டு, பாடி, நடனமாடிய பின்

நாம் நட்சத்திரங்களின் கீழ் இணைந்திருக்கிறோம்.

நம் மனங்கள் இருண்மையின் ஒரு பகுதியாக இருப்பதை

நாம் அறிகிறோம்.

அது விவரிக்க முடியாதது.

அது நித்தியத்துவமானது.

அது பொத்தி வைத்தலுக்கானது.

***

ஒரு காதல் கவிதை

நான் பிறப்பதற்கு முன்பே உன்னைக் காதலித்தேன்

லி-யங் லீ

 

நான் பிறப்பதற்கு முன்பே உன்னைக் காதலித்தேன்.

இது அர்த்தமற்றது, எனக்குத் தெரியும்.

 

உன் கண்களைக் கண்டேன்

எனக்குக் கண்கள் கிடைப்பதற்கு முன்பே.

நான் தகித்துக் கிடந்தேன்

எப்பொழுதும் உன் தோற்றம் வாய்க்க.

அந்தத் தாபம்

இந்த உடலாகக் காலவெளிக்குள் நுழைந்தது.

இந்த உடல் மெழுகு போல் உருக உருக

தாபம் தினவெடுத்தது.

மேலும் இந்த உடல் குறுகக் குறுக தாபம் வளர்கிறது.

அந்தத் தாபம் இந்த உடலுக்கு அப்பால்

நித்தியத்துவம் கொண்டது.

 

நான் பிறப்பதற்கு முன்பே உன்னைக் காதலித்தேன்.

இது அர்த்தமற்றது, எனக்குத் தெரியும்.

 

நித்தியத்துவத்திற்கு முன்பே,

உன் கழுத்து மற்றும் தோள்கள்,

உன் கணுக்கால் மற்றும் கால்விரல்களின் மீது

ஒரு விரைவுப் பார்வையைப் பதியவிட்டேன்.

அந்தத் தருணத்திலிருந்து

உனக்காகத் தனித்திருக்கிறேன்.

அந்தத் தனிமை இந்த உடலாக மண்ணில் பிறந்தது.

என் வாழ்வுப் பங்களிப்பு

தெளிவாக என் சொற்களில் விஞ்சும்

உன் பெயர் தவிர வெறொன்றில்லை.

உன் உதடுகளில் அழுத்தமாகப் பதிய வரும்

என் முத்தத்திலிருந்து

எப்பொழுதும் தப்பி ஓடுகிறது உன் முகம்.

 

தகித்தலில் நான் அதீத உன்மத்தம்,

என் விளக்கு வெறும் சதை,

என் ஒளி முக்காடிட்டுப் பாடுகிறது.

 

எதுவும் எழுதப்படாத என்னிதயத்தைத் தருகிறேன்

விரும்புவதை எழுது.

***

லி-யங் லீ(19, ஆகஸ்ட் 1957): எளிமை, அமைதி, அழுத்தமான த்வனி – இவை லீயின் எழுத்துகளில் பிரதிபலிப்பவை. இந்தோனேசியாவில் சீனப் பெற்றோருக்குப் பிறந்த அமெரிக்கக் கவி. லி போ மற்றும் து ஃப்யூ போன்ற சீனக் கிளாசிக்கல் கவிஞர்களின் தாக்கம் பெற்றவர். மாய யதார்த்தம், காரண காரிய முழுமைவாதத்தில் ஈடுபாடு கொண்டவர்.


கலிலியோ - பால் ட்ரான்

  

அந்தக் கடிகாரத்தை அப்புறப்படுத்திவிட்டால்

காலத்தை நிறுத்திவிட முடியும் என்று நினைத்தேன்

நிமிடக் கரம். மணிக்கரம்.

 

எதுவும் ஒன்றும் செய்ய முடியாது.

எதுவும் நிற்கவில்லை.

பின் தொடர மட்டும் முடிந்தது.

 

கடக்கும் நொடிகள் மனதாக இல்லாத

மனதின் இடிமழையில் இறந்த கன்றுகளைப் போலக்

குவிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

 

சிதைக்கப்பட்ட சுயத்தின் வரையறையுடன்

அகராதியிலிருந்து ஒரு பக்கம் கிழிந்தது.

என்னால் அதை எதிர்கொள்ள முடியவில்லை.

 

எதுவும் நிகழாதது போல் உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

அனைவரும் துயில் கலைந்து எழுந்தது தெரிகிறது

உடை உடுத்தினார்கள்; பணிக்குச் சென்றார்கள்;

வீட்டிற்குச் சென்றார்கள்.

 

விருந்து நிகழ்ச்சிகளும் இருந்தன. பரவசம்.

மதுபோதை. ஒருவருக்கொருவர் இணைநடனம்.

அப்பட்டம்.

*

"கவிதை ஒரு வெளிப்பாடு அல்ல என்பதை நான் நம்புகிறேன். பெண்டுலங்கள் காலத்தை அளவிடும் என கலிலியோ கண்டுபிடித்ததைப் போல, கண்டுபிடிப்பின் மூலம் உருப்பெற்ற கிளர்ச்சிமிக்க உள்ளார்ந்த ஒரு செயல்தான் கவிதை. இந்தக் கவிதையில், வன்செயல் விளைவுடன் முரண்படும் ஒரு பிரதிநிதியின் சுயசரிதை உண்மை பார்வையிலிருந்து வெகுதொலைவில் காட்சிக்கு அப்பால் உள்ளது. காலமாக இல்லாத, ஆனால் அனைத்தும் "பிளவுபடுத்தப்பட வேண்டும், பயனற்றதாக்கப்பட வேண்டும்" என்ற வெறி கொண்ட கண்டுபிடித்தல் என்பது, சொற்றொடரிலிருந்து சிதைவு வரை இந்தக் கவிதை எவ்வாறு ஊசலாடுகிறது என்பதன் வழியாக நிகழ்த்தப்படுகிறது. இறுதியில், ஒரு கடிகாரத்தின் பாகங்கள் பிரிக்கப்படுகின்றன, எனவே பயனற்றவையாகின்றன."


கவிதை: II (17) - ஜோஸ் கார்சியா வில்லா (1908-1997)

 

 

கவிதை என்பது முதலில்

ஒரு ஜாலவித்தை போல இருக்க வேண்டும்,

பின்னர் கடல்-கல் இசை போல,

மனதை ஈர்க்கும் ஜ்வலிப்பு போல,

ஒரு பறவை பூக்கும் ரகசியத்தைப்

பொத்தி வைத்திருப்பது போல இருக்க வேண்டும்.

ஒரு மணியொலி போல மெல்லியதாக,

அதே போல நெருப்பையும்

ஆலிங்கனம் செய்ய வேண்டும்.

இணங்குதல்களின் பேரறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு ரோஜாவைப் போல மண்டியிட வேண்டும்.

புறா மற்றும் மான்களின் ஒளிர்தலை

உள்வாங்குவதாக இருக்க வேண்டும்.

தேடுவதை ஒளித்து வைக்கக்கூடியதாக

இருக்க வேண்டும், ஒரு மணமகள் போல.

எல்லாவற்றிற்கும் மேலாக

கவிதையின் முகத்தில் புன்னகைக்கும் கடவுளை

அலைய விடுவதாக இருக்க வேண்டும்.

*

இன்றிரவு எந்தக் கவிதையும் பரிமாறுவதில்லை - அட்ரியன்னா ரிச் (1929-2012)


 

நீ வெறுங்காலுடன் நடந்ததையும்

ஒரு நீள் பார்வையிடலை அந்தப் புதிய நிலவின்

கண்ணிமையில் பதித்திருப்பதையும் கண்டேன்

 

பின்னர் ஆழ்துயில் தழுவ

ஆடை களைந்து அடர்கூந்தல் மீது உறங்கினாய்

ஆனால் எந்த நிலையிலும்

துயிலற்ற துயிலின்மை பற்றிய

உணர்வின்மை ஏதுமில்லாமல் இருந்தாய்

 

இன்றிரவு எந்தக் கவிதையும்

பரிமாறுவதில்லையென

நினைக்கிறேன்

 

காட்சி விவரணையின் சொற்றொடரியல்:

 

வினைச்சொல் பறத்தலை இயக்குகிறது

வினையுரிச்சொல் செயல்பாட்டைத் திருத்துகிறது

 

வினைச்சொல் பெயர்ச்சொல்லுக்கு ஆற்றலூட்டி

பொருளை மூழ்கடிக்கிறது

பெயர்ச்சொல் திணறுகிறது

நிலைதவறிய வினைச்சொல் தொடர்ந்து வினைபுரிந்து

 

இப்போது வாக்கியத்தை வரைபடமாக்குகிறது

*


அட்ரியன்னா செசில் ரிச் (மே 16, 1929 - மார்ச் 27, 2012) ஒரு அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர் மற்றும் பெண்ணியவாதி. 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட மற்றும் செல்வாக்குமிக்க கவிஞர்களில் ஒருவர். பெண்கள் மற்றும் லெஸ்பியன்களின் ஒடுக்குமுறையைக் கவிதையில் முதன்மைப்படுத்தியவர் என்ற பெருமையைப் பெற்றவர். பெண்ணிய அடையாளங்களின் கடுமையான வடிவங்களை விமர்சித்தவர்.

அடையாளம், பாலியல் மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஆராய்கிறது இவருடைய எழுத்து. இவருடைய முறையான லட்சியக் கவித்துவம் சமூக நீதிக்கான தொடர் தேடலையும், போர் எதிர்ப்பு இயக்கத்தில் பங்களிப்பையும், மேலும் தீவிரப் பெண்ணியக் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கிறது. 

அன்றாடப் பேச்சுவழக்கு, யாப்பியலைப் போன்று நீண்டு செல்லும் வாக்கிய அமைப்பு மற்றும் ஒழுங்கற்ற வரி நீளங்களின் தொனிகளைப் பயன்படுத்தி, வெளிப்படையான "கவிதையற்ற" மொழியை கவிதைக்குள் உட்படுத்த விழைகிறது அவருடைய கவிதையின் திறந்த வடிவம்.

*

ஸ்டீபன் மல்லார்மே கவிதை

 

புனிதமானவள் 

சன்னலில் ரகசியமாக ஒளிந்தபடி 
முன்னர் புல்லாங்குழல் அல்லது மாண்டலின் என அறியப்பட்ட 
தகதகக்கும் அவளுடைய இசைக்கருவியின் பொன் மெருகை 
மெதுவாக உதிர்க்கும் முதிய சந்தன மரத்துண்டு 
கம்பீரமான ஓடை குறித்து உரைக்கும் 
பழமை வாய்ந்த புத்தகத்தை விரித்தபடி 
சோபையற்ற புனிதமான ஒரு உயிராக இருக்கிறது
முன்னர் 
தெளிவற்ற உச்சரிப்புக்கும் 
ஒரு நாளின் இறுதியில் நடைபெறும் 
ஒழுங்கு குலையாத வழிபாட்டில் பாடப்படும் 
இரவுப் பாடலுக்கும் ஏற்றபடி 
காட்சிப்படுத்தும் சன்னலில் 
(காட்சிப்படுத்துதல் போல மின்னும் கறை படிந்த கண்ணாடி)
மாலை நேரச் சிறகுடன் 
தேவதையால் வடிவமைக்கப்பட்ட ஒரு யாழ் 
உவகை பொங்கும் நடனத்தால் மெருகேற்றுகிறது 
முதிய மரத்துண்டோ அல்லது பழமையான புத்தகமோ 
எதுவுமில்லாமல் 
பெரும் இரைச்சலுடன் நெருக்கமாக இணைந்து முன் நகரும் 
இடையூரற்ற மக்கள் திரளுக்காக 
பெருமிதத்துடன் அவள் இறுக அணைக்கிறாள் 
ஏதுவான ஒரு பறவையின் சிறகுத் தொகுதி மீது 
நிசப்தமான ஒரு இசைக் கலைஞனை.

 
ஆங்கிலத்தில் : ஹென்றி பியரி 

தமிழில் : மோகன ரவிச்சந்திரன் 

பால் வெலரி கவிதை

 

காலடிகள்

எனது அமைதியின் குழந்தைகளான உமது காலடிகள்
புனிதமாக, வெகு நிதானத்துடன் பதிக்கப்படுகின்றன
எனது கண்காணிப்பின் படுக்கை நோக்கி
ஊமையாக நகர்ந்து உறைகின்றன

தூய, தெய்வீக நிழலாக இல்லாதவர்கள்
மென்மையானவர்கள்,
உமது காலடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன !
கடவுளர்களே !... நான் யூகித்த பரிசுகள் அனைத்தும்
இந்த வெற்றுப் பாதங்களை அடைகின்றன !

உமது மேம்பட்ட உதடுகளால்
அவற்றை அழிக்க முனைகிறீர்கள் , எனில்
எனது சிந்தனைகளின் ஒரு வசிப்பிடம்
ஒரு முத்தத்தின் ஆகாரம்

இந்த இளம் செயலுக்கு அவசரப்படவில்லை
மென்மையாகவும் மென்மையற்றதாகவும் இருப்பதற்கு, இல்லையா?
ஏனெனில் நான் உமக்காகக் காத்திருப்பதில் திளைத்தேன்
மேலும் எனது இதயமே உமது காலடிகள்


தமிழில் : மோகன ரவிச்சந்திரன்