வெள்ளி, 28 மே, 2021

ஒரு காதல் கவிதை

நான் பிறப்பதற்கு முன்பே உன்னைக் காதலித்தேன்

லி-யங் லீ

 

நான் பிறப்பதற்கு முன்பே உன்னைக் காதலித்தேன்.

இது அர்த்தமற்றது, எனக்குத் தெரியும்.

 

உன் கண்களைக் கண்டேன்

எனக்குக் கண்கள் கிடைப்பதற்கு முன்பே.

நான் தகித்துக் கிடந்தேன்

எப்பொழுதும் உன் தோற்றம் வாய்க்க.

அந்தத் தாபம்

இந்த உடலாகக் காலவெளிக்குள் நுழைந்தது.

இந்த உடல் மெழுகு போல் உருக உருக

தாபம் தினவெடுத்தது.

மேலும் இந்த உடல் குறுகக் குறுக தாபம் வளர்கிறது.

அந்தத் தாபம் இந்த உடலுக்கு அப்பால்

நித்தியத்துவம் கொண்டது.

 

நான் பிறப்பதற்கு முன்பே உன்னைக் காதலித்தேன்.

இது அர்த்தமற்றது, எனக்குத் தெரியும்.

 

நித்தியத்துவத்திற்கு முன்பே,

உன் கழுத்து மற்றும் தோள்கள்,

உன் கணுக்கால் மற்றும் கால்விரல்களின் மீது

ஒரு விரைவுப் பார்வையைப் பதியவிட்டேன்.

அந்தத் தருணத்திலிருந்து

உனக்காகத் தனித்திருக்கிறேன்.

அந்தத் தனிமை இந்த உடலாக மண்ணில் பிறந்தது.

என் வாழ்வுப் பங்களிப்பு

தெளிவாக என் சொற்களில் விஞ்சும்

உன் பெயர் தவிர வெறொன்றில்லை.

உன் உதடுகளில் அழுத்தமாகப் பதிய வரும்

என் முத்தத்திலிருந்து

எப்பொழுதும் தப்பி ஓடுகிறது உன் முகம்.

 

தகித்தலில் நான் அதீத உன்மத்தம்,

என் விளக்கு வெறும் சதை,

என் ஒளி முக்காடிட்டுப் பாடுகிறது.

 

எதுவும் எழுதப்படாத என்னிதயத்தைத் தருகிறேன்

விரும்புவதை எழுது.

***

லி-யங் லீ(19, ஆகஸ்ட் 1957): எளிமை, அமைதி, அழுத்தமான த்வனி – இவை லீயின் எழுத்துகளில் பிரதிபலிப்பவை. இந்தோனேசியாவில் சீனப் பெற்றோருக்குப் பிறந்த அமெரிக்கக் கவி. லி போ மற்றும் து ஃப்யூ போன்ற சீனக் கிளாசிக்கல் கவிஞர்களின் தாக்கம் பெற்றவர். மாய யதார்த்தம், காரண காரிய முழுமைவாதத்தில் ஈடுபாடு கொண்டவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக