வெள்ளி, 28 மே, 2021

இன்றிரவு எந்தக் கவிதையும் பரிமாறுவதில்லை - அட்ரியன்னா ரிச் (1929-2012)


 

நீ வெறுங்காலுடன் நடந்ததையும்

ஒரு நீள் பார்வையிடலை அந்தப் புதிய நிலவின்

கண்ணிமையில் பதித்திருப்பதையும் கண்டேன்

 

பின்னர் ஆழ்துயில் தழுவ

ஆடை களைந்து அடர்கூந்தல் மீது உறங்கினாய்

ஆனால் எந்த நிலையிலும்

துயிலற்ற துயிலின்மை பற்றிய

உணர்வின்மை ஏதுமில்லாமல் இருந்தாய்

 

இன்றிரவு எந்தக் கவிதையும்

பரிமாறுவதில்லையென

நினைக்கிறேன்

 

காட்சி விவரணையின் சொற்றொடரியல்:

 

வினைச்சொல் பறத்தலை இயக்குகிறது

வினையுரிச்சொல் செயல்பாட்டைத் திருத்துகிறது

 

வினைச்சொல் பெயர்ச்சொல்லுக்கு ஆற்றலூட்டி

பொருளை மூழ்கடிக்கிறது

பெயர்ச்சொல் திணறுகிறது

நிலைதவறிய வினைச்சொல் தொடர்ந்து வினைபுரிந்து

 

இப்போது வாக்கியத்தை வரைபடமாக்குகிறது

*


அட்ரியன்னா செசில் ரிச் (மே 16, 1929 - மார்ச் 27, 2012) ஒரு அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர் மற்றும் பெண்ணியவாதி. 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட மற்றும் செல்வாக்குமிக்க கவிஞர்களில் ஒருவர். பெண்கள் மற்றும் லெஸ்பியன்களின் ஒடுக்குமுறையைக் கவிதையில் முதன்மைப்படுத்தியவர் என்ற பெருமையைப் பெற்றவர். பெண்ணிய அடையாளங்களின் கடுமையான வடிவங்களை விமர்சித்தவர்.

அடையாளம், பாலியல் மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஆராய்கிறது இவருடைய எழுத்து. இவருடைய முறையான லட்சியக் கவித்துவம் சமூக நீதிக்கான தொடர் தேடலையும், போர் எதிர்ப்பு இயக்கத்தில் பங்களிப்பையும், மேலும் தீவிரப் பெண்ணியக் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கிறது. 

அன்றாடப் பேச்சுவழக்கு, யாப்பியலைப் போன்று நீண்டு செல்லும் வாக்கிய அமைப்பு மற்றும் ஒழுங்கற்ற வரி நீளங்களின் தொனிகளைப் பயன்படுத்தி, வெளிப்படையான "கவிதையற்ற" மொழியை கவிதைக்குள் உட்படுத்த விழைகிறது அவருடைய கவிதையின் திறந்த வடிவம்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக