வெள்ளி, 28 மே, 2021

கூடுதலாக, அந்த நிலா... - மினா லாய் (1882-1966)

 

வானங்களின் முகம்

நம் வியப்பை

வழிநடத்துகிறது.

 

சுவர்க்கத்தின்

ஒளிமிகுந்த இன்மை

நம்மை வரவேற்கிறது.

 

வெண்சாம்பல், வட்டச் சடலம்

உனது விடைபெறல்

வலிமிகுந்த இலகுவுடன் நம்மைத் தொற்றுகிறது,

 

வெப்பப் பனிக்கட்டிகளால்

நரம்பு முனையங்களைத் தீண்டியவாறு

 

உணர்வற்ற நிலை போன்ற தூண்டுதல்,

பூப்பதைப் போன்ற தளர்வு

உன் முரண்மிக்க விடியலின் மறைமுக உணர்த்தல்கள்

சுயத்தை நிரப்புகின்றன;

நமது ஒவ்வொரு சடலமும் கடவுளாக மாறுகின்றன.

*


(1882-ல் லண்டனில் பிறந்த மினா லாய் ஒரு ஃப்யூச்சரிஸ்ட், டாடாயிஸ்ட், சர்ரியலிஸ்ட், ஃபெமினிஸ்ட், கன்செப்ஸ்வலிஸ்ட், மாடர்னிஸ்ட் மற்றும் போஸ்ட்-மாடர்னிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டவர். கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், ஓவியர் என பன்முகம் கொண்டவர். டி.எஸ்.எலியட், எஸ்ரா ப்வுண்ட், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் போன்றோரால் பாரட்டப்பட்டவர். 1966-ல் இறக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தவர். அவருடைய கவிதைகள் அவருடைய சுய வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. இத்தாலிய மக்களின் அதிர்வுமிக்க வெளிப்படுத்தப்படாத வாழ்வின் கூறுகளை சில கவிதைகள் சித்தரிக்கின்றன. வெளிப்படையான படிமங்கள், பேச்சுவழக்கு மொழி வடிவம் மற்றும் இத்தாலிய உயிர்ச்சக்தியின் சித்தரிப்பு அவர் கவிதைகளின் சிறப்பம்சங்கள். ஃப்யூச்சரிஸ்ட் பின்னணியின் கொலாஜ் சிதிலங்கள் இத்தகைய துடிப்புமிக்க கவிதைகளைக் கட்டமைக்க அவருக்கு உதவிகரமாக இருந்துள்ளன.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக