சூர்யோதயம்
ஜான் டான்
துடிப்பான முதிர்ந்த தந்திரக்காரனே, கட்டுக்கடங்காத சூரியனே,
ஏன் இவ்வாறு சன்னல் வழியாக, திரைகளினூடே
எங்களைச் சந்திக்கிறாய்?
உன் கிரண அசைவுகளோடு
காதலர்களின் பருவங்கள் விரைந்தோட வேண்டுமா?
நிர்வாணப் பகட்டுப் பாதகனே,
நேரந்தாழ்த்தும் பள்ளிச் சிறார்களையும்
மோசமாகக் கூத்தடிக்கும்
பயிற்சியாளர்களையும் போய் உதை,
மன்னர் சவாரி செல்வார் என கூடாரச் சிலந்திகளிடம் சொல்,
அலுவலகங்களை அறுவடை செய்ய
நாட்டு எறும்புகளை அழை,
அனைவரையும் போல், காலத்தின் கந்தல்களான
பருவங்களுக்குத் தெரியாது,
தட்பவெப்ப நிலைகளுக்கு தெரியாது,
மணித்துளிகளுக்கு, நாட்களுக்கு, மாதங்களுக்குத் தெரியாது,
காதலைப் பற்றி.
உனது கிரணங்கள் மதிப்பு வாய்ந்தவை, வலிமையானவை,
அவற்றை ஏன் சிந்திக்கிறாய்?
நான் ஒரு கண்சிமிட்டலில் அவற்றை
கிரகணமாய் மேகம் கொண்டு மூடுவேன்.
ஆனால் அந்தக் கண்சிமிட்டல் நேரத்திலும்
அவள் மீது என் பார்வை பதிவதை இழக்க மாட்டேன்.
அவள் கண்கள் உன்னைக் குருடாக்கவில்லை என்றால்,
மூலிகையும் கனிம வளமும் கொண்ட
இண்டஸ் நதிப் படுகை
நீ தவறவிட்ட இடத்தில் இருக்கிறதா என
நாளை அந்திமப் பொழுதில் என்னைப் பார்த்து சொல்,
அல்லது இங்கே வந்து என்னுடன் படு.
நீ நேற்று பார்த்த மன்னர்களைக் கேள், உணரலாம்,
அனைவரும் இங்கே ஒரே படுக்கை விரிப்பில்.
அவள் அனைத்துமானவள், அனைத்து
இளவரசிகளுமானவள், நான் வெறுமையானவன்,
இளவரசிகள் எங்களை விளையாட்டில் ஈடுபடுத்துகிறார்கள்;
இதனுடன் ஒப்பிட்டால்,
அனைத்துப் புகழ்ச்சிகளும் பாவனைகள்,
அனைத்து வளங்களும் போலிவேதியியல்.
நீ, சூரியன், கொஞ்சம் மகிழ்வான கலைவடிவம் எங்களைப் போல,
அதில் இந்த உலகம் இவ்வாறு சுருங்கிப் போனது.
உன் வயது எளிமையை யாசிக்கிறது,
உன் செயல் உலகிற்கு வாஞ்சையுடன் இருப்பதால்,
எங்களுக்கு காதலை ஊட்டிச் செல்கிறது.
இங்கே எங்களுக்காக ஒளி வீசு, எங்கும் உன் திறனைத் தீட்டிச்
செல்;
இந்தப் படுக்கை உன் மையம், இந்தச் சுவர்கள் உன் புவிக்கோளம்.
<|||||||||||||||||||||||||||||||>
ஜான் டான் (1572 – 1631) ஆங்கிலக் கவிஞர். இவருடைய எழுத்து வகை
உடனடித் திறப்புகளையும் பல்வேறு முரண்நகைகளையும் உள்ளடக்கியது. பதட்டமான தொடரியல்
மற்றும் கடினமான மொழிநடையும் கொண்டது. வழக்கமான கவிதையின் மென்தன்மைக்கு எதிரானது.
ஆனி மோர் என்பவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு பனிரெண்டு
குழந்தைகளுக்குத் தந்தையானார் ஜான் டான். இவருடைய கவிதைகள் அதிகமாக அச்சு வடிவம்
பெறாமல் கையெழுத்துப் பிரதிகளாகவே வெளிவந்தன. முன்னர் வெளிவராத இவருடைய ஒரு
கையெழுத்துப் பிரதி நவம்பர் 2018-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
மீமெய்யியல் எனும் கோட்பாட்டு 1781-ல் உருவாக்கப்படுகிறது. ஜான்
டானின் படைப்புகள் மீமெய்யியல் வடிவம் கொண்டவை என சிறப்பிக்கப்படுகின்றன. முரண்நகை
எழுத்துகளில் மட்டுமல்ல, இயற்கை மட்டுமே ஆளுமை கொண்டது எனும் கருத்தாக்கத்தை
அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைப் பிரதிகளிலும் அவர் மீமெய்யியலைப் பின்பற்றியே
எழுதினார் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
படிமங்களைப் பயன்படுத்தி இருவேறு கருத்துருக்களை ஒற்றைக் கருத்துருவாக ஒன்றிணைக்கும் நீட்டிக்கப்பட்ட உருவகம் மீமெய்யியல் எனக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக