வியாழன், 27 மே, 2021

ஸ்ட்ரக்சுரலிசம் என்ற கோட்பாடு குறித்த நூல்களில் வாசித்ததிலிருந்து... - மோகன ரவிச்சந்திரன்

அமைப்பியல்வாதம், அமைப்பியம், அமைப்புமையவாதம் என அழைக்கப்படும் இந்தச் சிந்தனைப்போக்கில் உள்ள “அமைப்பு” எனும் சொல் புதியதன்று. பழைய தத்துவங்களிலும் இலக்கியக் கொள்கைகளிலும் அமைப்பிய முற்கூறுகள் காணப்படுகின்றன. கதைப் பின்னல்களில் எளிமை மற்றும் தலைகீழாதல் என வகைப்படுத்துதலில் இக்கூறுகளைக் காணலாம். தொல்காப்பியர் பூக்களின் அடிப்படையில் நிலங்களை வகைப்படுத்தி மானுட ஒழுக்கங்களைத் திணைகளாக அமைத்திருப்பதில் அமைப்பியக் கூறுகளைக் காணலாம்.    

இயல் (-logy, ics) என்ற பின்னுருபுகளைக் கொண்ட சொற்கள் அறிவியல், பொருளியல் போன்று முடிந்த முடிபாகக் கருத்துகளைக் கொண்டவை. -ism என்பது இயம் அல்லது வாதம் என்றிருப்பது சரி. காந்தியம் (Gandhism), மார்க்சியம் (Marxism) போன்றவை உதாரணங்கள்.

அமைப்பியத்தின் பெயரே விளக்குவது போல், இதுவரை மூலங்கள் அல்லது மூலகங்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த அழுத்தத்தை அமைப்புகளுக்கு மாற்றி நோக்குவது இது. எந்தத் துறையை ஆய்வுப் பொருளாகக் கொண்டாலும், அமைப்பியம் நோக்க வேண்டிய நடைமுறையை ஒரு குறிப்பீட்டு அமைப்பாக அல்லது ஒரு பிரதியாகக் காண்கிறது. பிரதி சேர்ந்த கருத்தாக்கங்களையும் – அதாவது சங்கேதம், குறி, இலக்கணம், தொடரியல் போன்றவற்றையும் மற்றும் மொழியிலிருந்து பெறப்பட்ட எல்லாக் கருத்தாக்கங்களையும் ஆய்வுக்குப் பயன்படுத்துகிறது. குறிப்பிட்ட செய்திகளுக்கு ஊடாக இருக்கும் சங்கேதங்களைக் கண்டறிவதில் அமைப்பியம் ஆர்வம் காட்டுகிறது.

அமைப்பியம், இலக்கிய விமர்சகர்களிடம் – இலக்கியக் கொள்கைத் துறையில் – கவிதையியலில் ஒரு பெரும் புத்தார்வத்தினை உண்டாக்கியது. மொழியியலிருந்து மட்டுமல்ல, மற்ற அறிவுத் துறைகளிலிருந்தும் குறிப்பாக, தத்துவம், உளப்பகுப்பாய்வியல், மார்க்சியம் இவற்றிலிருந்தும் சொற்களைப் பெற்று ஆள்கிறது. இவ்வாறு செய்யும் பொழுது, இலக்கியக் கொள்கையாகப் பிறந்த அமைப்பியம், இந்த எல்லா அறிவுத் துறைகளும் ஒன்று கூடிக் கலந்த ஒரு சக்தி வாய்ந்த தனி அறிவுத் துறையாக உருப்பெற்று விட்டது.

மார்க்சியமும் ஃப்ராய்டியமும் வற்புறுத்துவது போல, அமைப்பியமும் தோற்றங்களுக்கும் மெய்ம்மைக்கும் தொடர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது. அனுபவவாதம் கருதுவது போல், மெய்ம்மை என்பது நமது புலன்களுக்கு நேரடியாகக் கிட்டுவது அல்ல; வெளிப்படையாகத் தெரியும் அர்த்தம் உண்மையான அர்த்தம் அல்ல என்றார் ஃப்ராய்டு.

மொழி மற்றும் இலக்கியப் பிரதி குறித்து மட்டுமல்லாமல் மனித மூளையின் இயக்கம் குறித்தும் அடிப்படைப் பார்வைகளை முன்வைத்துள்ளது அமைப்பியம். மொழியின் இயல்பு, படைப்பாளியின் தனித்துவம், பொருளாக்கம், யதார்த்த அறிவு பற்றி வழங்கி வரும் அதீதமான கருத்தாக்கங்களை அமைப்பியம் வலுவாகத் தாக்கி புதிய அடிப்படை வினாக்களை எழுப்பியது.

வெளிப்படையாகவும் இயல்பானதாகவும் புலப்படுவது உண்மையில் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதில்லை. தெளிவானதாகவும் இயல்பானதாகவும் காணப்படுவது தானாக ஏற்பட்டதல்ல. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறிப்பிட்ட செயற்பாங்குகள் காரணமாக அவ்வாறு நமக்குப் புலனாகிறது.

அமைப்பியம் மொழிக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவுக்குப் புதிய விளக்கம் தருகிறது. சிந்தனைத் தொடர் புறநிலையில் நோக்கும் போது அருவமானது. அகநிலையிலோ அது மொழிச் “சொல்லாடலின்” உள்ளுறையில் “எழுதப்பட்ட” உருவில் தென்படுகிறது. மார்க்சியவாதம் போல் அமைப்பியம் நவீனவாதத்தின் அந்நியமாதலுக்கு எதிரானது.

ஒரு பொருளின் பெயர் அல்லது அர்த்தம் “அமைப்பி”லிருந்து உருவாகிறது. அந்த அமைப்பு கட்புலனாகாத ஒன்று. உலகம் உறவுகளின் நெறிமுறையால் இணைக்கப்பட்டது என்ற கருத்தைத்தான் அமைப்பியம் வலியுறுத்துகிறது. உறவுகளின் நெறிமுறையின்றி எந்தப் பொருளுக்கும் இருப்புத் தன்மை கிடையாது. பொருள்களை அவற்றின் நெறிமுறையில் அதாவது அமைப்பின் அடிப்படையில் பார்க்கும் போதுதான் அவை பற்றிய அறிவு உண்டாகிறது. உண்மையில் மனித மூளைச்செயற்பாட்டின் முதல் அறிகுறி அமைப்புமுறைச் செயற்பாங்குதான்.

அமைப்பியம் படைப்பையோ படைப்பாளியையோ தேடுவதில்லை. படைப்பு எந்த ஒழுங்கமைவின் கீழ் உருவானதோ, அந்த ஒழுங்கமைவைத் தேடுவதிலேயே குறியாக உள்ளது. அமைப்பியத்தில் இலக்கிய வெளிப்பாட்டைக் காட்டிலும் மொழிக்குத்தான் முதன்மை. அப்படி எனில் எல்லா இலக்கிய வெளிப்பாடும் (பிரதி) முன்னமே எழுதப்பட்ட ஒழுங்கமைவின்படி அமையப் பெறுகிறது.

மொழி, யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்பதற்குப் பதிலாக, அமைப்பியச் சிந்தனை “மொழியின் அமைப்பு யதார்த்தத்தை உருவாக்குகிறது” என்ற கருதுகோளை வலியுறுத்துகிறது.

அமைப்பியம் பற்றி, அதன் முறையியல் பற்றி வேறு சில குறைகளும் கூறப்படுவதுண்டு. குறிப்பாக, அமைப்பியம் ஒரு புனர்-பிளேட்டோனியவாதம் என்ற விமர்சனம் உண்டு. ஏனெனில் இது குறிப்பிட்டதொரு பருப்பொருள் என்ற கருத்தைத் தூக்கி எறிந்து விட்டு, அதன் இடத்தில் அதைப் பிரதிபலிப்பாக அல்லது நிழலாட்டமாகக் கருதுகிறது.

அமைப்பியத்தில் குறிப்பான் என்பது குறிப்பீட்டைவிட முதன்மையானது என்றும், தனித்தது என்றும் கருதப்பட்டது. ஆனால் பின்-அமைப்பியத்தில் குறிப்பானும் குறிப்பீடும் பிரிக்க முடியாதவை. ஆனால் ஒன்றிணைந்தவை அல்ல என்று கருதப்படுகிறது. 

பின்-அமைப்பியம்

அமைப்பியத்திற்கு எதிராகத் தோன்றிய அல்லது அதன் நீட்சியாகத் தோன்றிய பல வகையான, பலதுறைகளிலும் தோன்றிய எதிர்வினை பின்-அமைப்பியம். பின்-அமைப்பியமும் ஒரு தீவிர மொழிநிர்ணய வாதமே. மொழி தன்னைத் தானே சுட்டிக் கொள்வது என்று சசூர் கூறிய அடிப்படையுடன், மொழி என்பது ஒரு சுய பிரதிபலிப்பு என்ற அடிப்படையும் பின்-அமைப்பியத்தில் இணைந்து கொண்டது. இந்த உலகமே குழப்பம் என்பதனைத் தன்னியல்பாகக் கொண்டிருக்கும் போது, இதில் படைக்கப்படும் மொழி, இலக்கியம் இவற்றில் மட்டும் ஒருங்கமைவு எங்கிருக்க முடியும்? எனவே மொழியும் குழப்பமானது; அதில் ஒருங்கமைவும் இல்லை என்பதால், மையம் என்ற அமைப்பு என்பதும் இல்லை என்று கூறுவதிலிருந்து பின்-அமைப்பியம் தோன்றுகிறது.

அமைப்பியத்திற்கும் பின்-அமைப்பியத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே சார்புவாதம், எதிர்யதார்த்தவாதம் ஆகியவற்றில் உடன்படுபவை. அமைப்பியத்தினை நியூட்டோனிய (பருமைநிலை) இயற்பியலுக்கு ஒப்பிட்டால், பின்-அமைப்பியத்தினை ஐன்ஸ்டீனுடைய (நுண்நிலை) இயற்பியலுக்கு ஒப்பிடலாம்.

மொழி தனக்குள்ளாகவே தகர்ப்பமைப்புச் செய்யும் தன்மை எல்லா அமைப்புகளையும் உடைத்து நொறுக்குவதற்குப் பயன்படும் எனவும், இதனால் ஆளும் அதிகார அமைப்புகளை அழிக்கலாம் எனவும் பின்-அமைப்பியம் நம்பியது.

மொழி தன் அர்த்தங்களைத் தானே அழித்துக் கொள்ளும் மற்றும் ஒத்திப் போடும் பாங்கினையும் (தெரிதா), அதே மொழி, பிரக்ஞையின் கட்டமைப்பாக இருக்கும் நிலைமையையும் (லக்கான்), இந்த மொழியே அதிகார அமைப்புகளுக்கு அடிப்படையான தளம் அமைத்துத் தருவதையும் (ஃபூக்கோ) பின்-அமைப்பியவாதிகள் உணர்த்தினர்.

மானிட இனம் உண்டாக்கிய குறிகளை அறிவதில் அறிவியல்முறை என்ற ஆயுதத்தோடு வீரமாக ஈடுபட்டது அமைப்பியம். பின்-அமைப்பியமோ கேலி, விளையாட்டு, ஆட்டம், கிண்டல், நையாண்டி இவற்றை ஆயுதமாகக் கொண்டு தன்னையே சோதித்துக் கொள்கிறது. இவ்விதச் சோதனை நிர்ணயவாதத்திற்கு எதிரி. இறுகிப் போதலை அடியோடு அழிக்கும் ஆயுதம். ஆயினும் தன்னைச் சோதித்துக் குறை கண்டுவிட்டால் போதுமா, அடுத்த அடிவைப்பு என்ன என்பது தான் கேள்வி. இதற்குப் பின்-அமைப்பியம் பதில் சொல்ல மறுக்கிறது.   

<|||||||||||||||||||>



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக