வியாழன், 27 மே, 2021

சு.வேணுகோபால் எழுதிய புத்துயிர்ப்பு - மோகன ரவிச்சந்திரன்

சு.வேணுகோபால் எழுதிய சிறுகதை “புத்துயிர்ப்பு”. வெண்ணிலை தொகுப்பில் உள்ளது. கதைசொல்லியை ஒரு வாசிப்பவராக மாற்றிய வித்தை இதில் நிகழ்ந்துள்ளது. சிறுகதையை வாசிப்பவர் தனது ஒளிப்படக் கருவியுடன் காட்சி அமைப்புகளைப் பதிவு செய்தபடி செல்வதாகத் தோன்றுகிறது. அதாவது ரோலண்ட் பார்த் கூறிய படைப்பாளன் இல்லாநிலை.

படைப்பாளனின் உணர்வுகளும் முன்முடிவுகளும் பிரதியின் ஒரு வறையறுக்கப்பட்ட விளக்கங்களை மட்டும் முன்மொழிகின்றன என ரோலண்ட் பார்த் கூறுகிறார். இச்சிறுகதை ஒரு நேர்கோட்டுச் சித்திரம். துல்லியமான காட்சிப்படுத்தலும் விவரணையும் வாசிப்பவர் முன்வைக்கப்படுகின்றன. எவ்வித முன்முடிவுகளும் எந்த இடத்திலும் திணிக்கப்படுவதில்லை.

தீவனம் தேடிச் செல்பவனின் நிலக்காட்சியில் சிற்றெறும்புச்சாரி முதல் அனைத்து நிலைகளும் வெகு நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசையாய்க் காண ஒரு புல்கூட இல்லை. புல்சரிவு பொட்டலாக இருக்கிறது. இலையுதிர்த்த பெரிய மரங்கள், தீப்பற்றித் தீய்ந்து போன கரியமலை என ஒரு பெரும் வறட்சியின் உண்மைநிலை ஒவ்வொரு சொல்லிலும் செதுக்கப்பட்டு அவலச் சித்திரமாய் விரிகிறது.

தீவனம் கிடைக்காமல் காய்ந்த ஒரு பிடி புல்லுடன் திரும்புகிறான். கொட்டத்திற்குள் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறது நிறை சினைப்பசு. நாக்கை நீட்டி சப்புக் கொட்டும் சித்திரம் நம் மனதில் பதியும் பொழுது கண்ணில் நீர் திரையிடுவதைத் தவிர்க்க முடியாது. காய்ந்த ஒரு பிடி புல் அதன் ஒரு வாய்க்குக்கூடப் போதவில்லை. காடியில் ஒரு பொட்டுத் தீவனமில்லை. அருகில் நிற்கும் அவனுடைய புறங்கையை நக்குகிறது பசு. ஒரு வாளி தண்ணீர்கூட வைக்கவில்லை என்பது அவனுக்கு உறைக்கிறது. மனைவியை நொந்து கொள்கிறான்.

பசுவின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக அவன் அறிந்து கொள்வதை நாம் போகிற போக்கில் உணர முடிகிறது. இதை ஒரு காட்சித் தொடர் அமைப்பு எனச் சொல்லலாம். ஒவ்வொரு வார்த்தையும் சொற்றொடரும் ஒரு ஒழுங்கான சந்த கதியில் இடையூறில்லாமல் இயங்குவதைக் காண முடிகிறது. ஒரே நேர்கோட்டுச் சித்திரக் கட்டமைப்பைக் கொண்டது இந்தப் புனைவு.

மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. வாளிநீரைத் தூக்கிக் கொண்டு வருகிறாள். தீவனம் கிடைக்கவில்லையா எனக் கேட்கிறாள். அதற்கு அவனிடம் வார்த்தைகள் இல்லை. அந்த மெளனம் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஏதுவாக வெறும் புள்ளிகளால் அந்தக் காட்சி கட்டமைக்கப்படுகிறது.

அதுக்குத்தான் மாட்டக் கொடுத்திட்டு செழிம்பு வர்றப்ப ஒண்ணு வாங்கிக்கலாமன்னு சொன்னேன் என்று அவள் கூறும் போது சார்ப்பில் சொருகி வைத்திருந்த குச்சியை உருவிக் கொண்டு அவளை அடிக்க ஓடுகிறான். ஏனோ அடிக்கவில்லை. கதை முழுவதும் அவனுடைய கோபமும் ஆவேசமும் உத்வேகமும் கதைக்கு உயிரோட்டம் அளிக்கக்கூடியவை. ஒரு பாத்திரத்தின் முழுமையான இயல்பை வடிவமைக்க கதை முழுவதும் முழுமையைத் தேடும் ஒரு பயணம் பின்னிப் பிணைந்திருப்பதைக் காண முடிகிறது.

நகையை அடமானம் வைத்தும்கூட புல் வாங்க முடியவில்லை. திருடத் துணிகிறான். அவனுடைய ஆகிருதி பற்றி கதையின் தேவையான இடங்களில் வெகுவாகச் சிலாகிக்கப்படுகிறது. அத்தகைய ஆளுமை நேர் எதிராகத் திருப்பப்பட்டு ஒரு இருண்மை வெளிப்படுகிறது. தற்கொலைக்கு முயன்றவனை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.

நிறைமாத கர்ப்பிணி அழுது புலம்பியதில் குறைப்பிரசவம் நிகழ்கிறது. சிசுவை எடுத்து சூரியனிடம் காட்டுகிறார்கள். வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்தது குழந்தை என்று குலவையிட்டனர் பெண்கள் என நிறைவுறுகிறது.

இது கதைக்களன். அதற்கு மிகப் பொருத்தமாகக் கட்டமைக்கப்படுகிறது மொழிநடை. வார்த்தைப் பிரயோகங்கள் மண் வாசனையோடு இருக்கின்றன. மனிதர்கள் அந்த வாசனையோடு வாழ்ந்திருக்கிறார்கள். எப்பொழுதும் முரண்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன மனிதர்களின் இயல்புகள். இருத்தலும் இன்மையும். அவலமும் உயிர்ப்பும். துணிவும் இயலாமையும் என எதிரெதிர் இயல்புகள் மனிதர்களை உருவாக்கியும் சிதைத்தும் இயங்குகின்றன.

கதைக்களன் முழுவதும் நேரடியான, தெளிவான பதிவுகள் தென்பட்டாலும் ஒரு குறியீட்டுத் தன்மை உள்வயமாகத் தொனிப்பதை உணரலாம். தரிசாக, வறட்சியாகக் கிடப்பது நிலம் மட்டுமல்ல; மனிதர்களும்தான். ஒரு புத்துயிர்ப்பிற்காக மனிதர்கள் ஏங்குகிறார்கள்.  கதையின் தொடர்விளைவுகளைக் கட்டவிழ்ப்பதன் மூலம் அதன் மையத்தைத் தொட முடியும். கதைக்களனில் ஊடாடும் இயங்கியலையும் கட்டவிழ்க்க முடியும். பாத்திரங்கள், இலக்கு, தூண்டுதல், எதிர்நிலைகள் போன்றவற்றை உடைத்து ஆய்வு செய்யும் பொழுது அவை ஒரு நேர்த்தியான கலைப்படைப்பை உருவாக்குவதை அறியலாம்.

கட்டவிழ்த்தல் என்பது மையத்தைக் கண்டறிய ஏதுவாக ஒரு  சிதறலை உருவாக்குவது. ஒரு பிரதியைக் கட்டவிழ்ப்பதன் மூலம் அப்பிரதியின் நேரடியான உள்ளீட்டுக்கு அப்பால் ஒன்றைக் கண்டறியலாம். புதிய அர்த்தங்களையும் மெய்நிலைகளையும் வெளிக் கொண்டு வரலாம். பிரதியின் ஆன்மாவுக்கும் சொற்களுக்கும் இடையில் உள்ள நெருக்கடிகள், அர்த்தங்களின் உயிர்ப்புமிக்க மற்றும் செயலிழந்த நிலைப்பாடுகள், பொருத்தமற்ற இயல்புகள், இருண்மையான, முரண்மிக்க நிகழ்வுகள், இரட்டைத் தன்மைகள் என அனைத்தும் கட்டவிழ்க்கப்படும் பொழுது பிரதியின் மையம் புலப்படுகிறது.

இச்சிறுகதையின் மையம் அறம் என்பது தவிர அதற்கு மேல் எதுவும் இருக்க முடியாது. இன்மையே இயல்பாக இருக்கின்ற உலகில் தேடுவதையே இலக்காகக் கொண்ட இருத்தலில் அறம் எவ்வாறு செயல்புரிகிறது என்பதை அதி நுட்பமாகச் சித்தரிக்கிறது இந்தச் சிறுபுனைவு. ஒரு நீள்கதையின் துவக்கம் போல் கட்டமைக்கப்பட்டுத் தொடர்ந்து செல்லும் போக்கில் எத்தகைய தருணத்தில் ஒரு உயிர்ப்பு நிகழும் என்பதை அறியும் பகுதி உயிரோட்டம் நிறைந்தது.

<|||||||||||||||||||||||>



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக