இசைத் தொகுப்புகளைப் போல, நாவல் வடிவமும் பலவிதமான குரலோசைகளின் மோதல்களைப் பெற்றிருக்க வேண்டும். அதில் ஒவ்வொரு குரலும் தனித்துவம் மிக்கதாக இருக்க வேண்டும். மிலன் குந்த்ரா 25 வயது வரை இசை பயின்றவர். நாவலெனும் கலைவடிவத்தைப் புரிந்து கொள்ள இந்த இசை உணர்வு அவருக்குப் பேருதவியாக இருந்தது.
கவிதையும் கருத்தியலும் நாவல் வடிவத்தை தமது உள்ளீடாக்க முடியாது; ஆனால் நாவல், கவிதை மற்றும் கருத்தியலை தனது உள்ளீடாக்க முடியும் என்று கூறுகிறார் குந்த்ரா. உண்மையான கலைஞன் பின்னணியில் இருக்கும் கண்டறியப்படாத மெய்மையைத் தேடுபவராக இருக்கிறார்.
மிலன் குந்த்ராவின் The Art of the Novel ஐந்து கட்டுரைகளும் இரண்டு உரையாடல்களும் கொண்ட தொகுப்பு. இந்த நூல், எழுதுதல் கோட்பாடாக ஒரு சுய-செயல்திறனை ஆதரிக்கிறது; படைப்பில் அல்லது விமர்சனத்தில் கோட்பாட்டாளர்களை ஊக்குவிக்கிறது.
நவீன ஐரோப்பாவின் நிறுவனர் என டான் க்விக்ஸாட் எழுதிய செர்வாண்டஸைக் குறிப்பிடுகிறார் நாவலாசிரியரான குந்த்ரா. பால்ஸாக் வரலாற்றின் வேர். ஃப்ளாபர்ட் ஒரு மறைநிலைவாதி. டால்ஸ்டாய் மானுட ஒழுக்கத்தினுள் ஊடுருபவர். ஐரோப்பிய நாவல், இருத்தலின் தர்க்கத்தை அடையாளம் காணும் பேரார்வத்தை தன்னுள் விதைக்கிறது. நீட்ஷேவுடைய கடவுளின் மரணத்துடன் ஒரு கலகத் தன்மைக்குள் நுழையத் தொடங்குகிறது.
நவீன நாவல் என்பது ஒரு முரணுரை. அதில் மனிதர்கள் வாழ்வின் சிதிலங்களால் சுவைக்கப்படுகிறார்கள். அங்கு பாத்திரங்கள் சாதிக்கின்றன. சுயம் மற்றும் வரலாறு பற்றிய உரையாடல்கள் அங்கு கட்டமைக்கப்படுகின்றன. நாவலில் சுயம் என்பது ஒரு வெளிப்பாட்டு வகைமை. சுயம் என்பது ஒப்புதலின் குறியீடு. சுயம் என்பது கவித்துவ வரிகளுக்கு நெருக்கமான கலைவடிவம். வரலாற்றின் உலகளாவிய தன்மையிலிருந்து ஒரு நாவலாசிரியர் தப்ப முடியாது என்பது மிலன் குந்த்ராவின் கூற்று.
புனைகதையில் வரலாற்று நிகழ்வுகளின் பங்களிப்பு, செயல்பாடுகளுக்கான அர்த்தம், பிந்தைய உளவியல் நாவல்களில் பாத்திரங்களின் வடிவமைப்பு என்பவை மிலன் குந்த்ராவின் படைப்பு பற்றிய விவாதங்களின் முக்கிய அம்சங்கள்.
<||||||||||||||||||>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக