தண்ணீரை இசைக்கிறேன்.
முற்றிலுமாக அது அவசியமில்லை அல்லது தேவையில்லை, ஆனால்
மரங்களின் கீழ் பாய்ந்தோடுகின்றன எண்ணங்கள்
ஒரு இதமான மெல்லிய இசை போல. நாளுக்கு நாள்
அதீதப் பிரியங்கள் ஊற்றெடுக்கின்றன.
எண்ணற்ற பொத்தான்களுடன் தண்ணீரை இசைக்கிறேன்,
அது முற்றிலும் அவசியமில்லை,
விதிமுறைகள் எதுவும் கிடையாது. ஆனால்
அதை நான் நேசிக்கிறேன்
ஆகவே என் கால்விரல்களை
இந்த இளகிய புவி மீது நிலைப்படுத்தி
சற்றுக் கடினமாக மீட்டுகிறேன்
தண்ணீரின் மேற்பரப்பில்,
எனது உடல் ஒரு மாபெரும் பியானோ. பேராற்றல். வெகு திண்ணம்.
எனது விரல்களினூடே அந்த வலியை வழிந்தோட விடுகிறேன்.
நேற்றைய இன்றைய தீய எண்ணங்களைப் பவித்திரப்படுத்துகிறேன்.
எனது பழிச் செயல்கள் உற்சாகமாக அணுகுகின்றன. களங்கமற்றதுகள்.
நான் இசைக்கும் பொழுது நான் பியானோ கலைஞன்,
தண்ணீரின் மேற்பரப்பில் மேலும் ஒரு மெல்லிசை –
மற்றொரு பட்டாம்பூச்சி, மற்றும் நானும் –
பிரவகித்துப் பறத்தலில் காயப்படுத்தும் வளைவுகளைக் கடந்து செல்லலாம்.
வண்ணங்களின் மிகுதியில்.
ஹீப்ரூ மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: லிஸா கட்ஸ்
அட்மியெல் காஸ்மன்: நான்கு கவிதைத் தொகுப்புகள், ஹீப்ரூ-ஆங்கில இருமொழித் தொகுப்புகள் மற்றும் Talmud and Midrash பற்றிய ஐந்து கல்வியியல் நூல்களின் ஆசிரியர். கல்வியியல் நூல்களில் இரண்டு ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இவர் பாட்ஸ்டாம் பல்கலைக் கழகத்தில் மத ஆராய்ச்சிப் பேராசிரியர். பெர்லினில் உள்ள ஸைஜர் ராப்பினிக்கல் செமினரியில் கல்வியியல் இயக்குநர்.
லிஸா கட்ஸ்: இவர் Poetry International Rotterdam Web-ன் இஸ்ரேலியப் பக்கங்களின் ஆசிரியர். 2017 கோடையில் ஐயோவா பல்கலைக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர்.
தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக