வியாழன், 27 மே, 2021

வாசித்தல் நிலை பற்றி... - மோகன ரவிச்சந்திரன்

வாசித்தல் என்பது விவரிக்க முடியாத ஒன்று. ஒரு செயல்பாட்டைக் காட்டிலும் அதீதமானது. வாழ்வியல் அமைப்புமுறைகள், தனித்துவமான நடத்தைகள் மற்றும் கலாச்சார இணைவுகளின் பன்முகத் தன்மையை உள்ளடக்கிய ஒரு நடைமுறை. வாசித்தல் என்பது ஒரு பிரதியைப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் மேலானது.

அல்பர்ட்டோ மேங்குவெல் தனது வாசித்தலின் வரலாறு எனும் நூலில் இவ்வாறு விவரிக்கிறார்: ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துகளை வாசித்தல் என்பது அதன் பல தோற்றங்களில் உள்ள ஒன்றை வாசிப்பதாகும். ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர் காணக் கிடைக்காத நட்சத்திரங்களின் வரைபடங்களை வாசிப்பது, கட்டிடக் கலை நிபுணர் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு இருப்பிடத்தை அமைப்பதற்காக நிலத்தை வாசிப்பது, விலங்கியல் அறிஞர் வனத்தில் ஒரு விலங்கின் காலடித் தடத்தை வாசிப்பது, சீட்டு விளையாடுபவர் வெற்றிக்கான சீட்டை வீசுவதற்கு முன் எதிராலியின் உடல் அசைவுகளை வாசிப்பது, நடனக் கலைஞர் நடனம் கற்றுத் தருபவரின் பாவனைகளை வாசிப்பது, பொதுஜனங்கள் மேடையில் நாட்டியமாடுபவரின் இயக்கங்களை வாசிப்பது, துணி நெய்பவர் நெய்யப்படும் கார்பெட்டின் சிக்கலான வடிவத்தை வாசிப்பது, இசைக் கலைஞர் ஸ்வரக் குறிப்புகளை வாசிப்பது, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் முகத்தில் மலர்ச்சி, அச்சம் அல்லது வியப்பை வாசிப்பது, சீன ஜோதிடர் ஆமையின் முதுகில் உள்ள பழங்காலக் குறிகளை வாசிப்பது, காதலன் தனது இரவுகளில் போர்வைகளுக்கடியில் காதலியின் உடலைக் குருட்டுத்தனமாக வாசிப்பது, நோயாளிகள் தங்கள் கனவுகளை வாசிக்க உளவியல் அறிஞர் உதவுவது, ஹவாய் மீனவன் கடல் நீரில் கையை விட்டு நீரோட்டத்தை வாசிப்பது, உழவன் வானத்தில் தட்பவெப்ப நிலையை வாசிப்பது, இவையனைத்தும் புத்தகம் வாசிப்பவருடன் ரகசியக் குறி எழுத்தின் பொருளைக் கண்டுபிடிக்கும் தந்திரத்தையும், குறியீடுகளை மொழி பெயர்க்கும் கலையையும் பகிர்ந்து கொள்கின்றன.

மேங்குவெல் மேலும் கூறுகிறார்: நாம் என்னவாக, எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை ஒரு நொடி நேரப் பார்வையில் யூகிக்க ஏதுவாக, நாம் அனைவரும் நம்மையும் நம்மைச் சுற்றி உள்ள உலகத்தையும் வாசிக்கிறோம். புரிந்து கொள்வதற்காக அல்லது புரிந்து கொள்ளத் துவங்குவதற்காக வாசிக்கிறோம். வாசித்தல் என்பது சுவாசித்தல் போல அவசியமான ஒரு செயல்.

இந்த அர்த்தத்தில், ஜிங்கோ மரத்தின் இலை பற்றிய கதேவினுடைய ஒரு கவிதை, வாசித்தலின் இரட்டைப் பண்புகளை விவரிக்கிறது. புத்தகத்தின் ஒரு பக்கத்தைப் போல, பரந்த வனத்தில் காணக்கிடைக்காத தாவரங்களின் நவீனப் பிரதிநிதியாக இருப்பதால், ஜிங்கோ மரம் உயிர்ப்புள்ள புதைபடிவம் என அழைக்கப்படுகிறது. ஒற்றைத் தண்டிலிருந்து பிறந்தாலும் அதன் ஒவ்வொரு இலையும் இரட்டையாகத் தோற்றமளிக்கும். இந்த இருண்மைத் தன்மை கதேவை இக்கவிதையை எழுதத் தூண்டியிருக்க வேண்டும்:


கிழக்குமுகமாகப் பயணிக்கும் அந்தச் சிறு இலை

இப்பொழுது எனது தோட்டத்தில் நிலைகொள்கிறது

விவேகத்திற்கான அறிவைத் தாங்கி

வளமான, அந்தரங்கமான அர்த்தங்களை வழங்குகிறது.

 

இரண்டாகப் பிளவுபட்டாலும் முழுமையாக இருக்கும்

பசுமையான, உயிர்ப்புள்ள படைப்புகளில் ஒன்றா அது?

ஒற்றை ஆத்மாவாக மாறுவதற்காக

ஒன்றோடொன்று ஐக்கியமான இரண்டா அது?

 

இந்த வினாக்களுக்குச் சரியான பதில்களை

ஒவ்வொருவரும் கண்டடைய முடியும்.

நான் கூட அந்த இரண்டு மற்றும் ஒன்று என்பதை

எனக்குச் சொந்தமான கவிதைகளிலிருந்து சொல்ல முடியாதா?

-/||||||||||||||||||||\-



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக