வெள்ளி, 28 மே, 2021

டயானாவின் மரம் - அலஹேந்த்ரா பிஸார்நிக்





முன்னுரை:
ஆக்டேவியா பாஸ்

  
அலஹேந்த்ரா பிஸார்நிக்கின் டயானாவின் மரம் (Chem.): அதீத வெப்பநிலைகளைப் பொறுத்து, மெய்மையின் ஒரு தீர்வில், தீவிரப் பதட்டம் மற்றும் திகைப்பூட்டும் தெளிவு ஆகியவற்றின் இணைப்பால் வடிவமைக்கப்பட்ட ஒரு சொற்பொருள் சார்ந்த படிகமாக்கல். இந்த உலோகக் கலவையின் தயாரிப்பு பொய்களின் தடயங்களைக் கொண்டிருக்கவில்லை. (Bot.): டயானாவின் மரம் தெளிவாக உள்ளது, எந்த இருண்மையையும் தரவில்லை. அதன் சுய ஒளியை அது தருகிறது, சுருக்கமாகவும் சற்று மினுங்கியபடியும். அமெரிக்காவின் தரிசு நிலம் அதன் பூர்வீகம். அங்கு வரவேற்பற்ற சூழல், கடுமையான சொல்லாடல்களும் சமய முழக்கங்களும், மற்றும் உயிர்ப்புமிக்க இனங்களின் பொதுவான மந்த நிலை, அதன் நட்புகள், அனைத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஈடுகட்டலின் அரிய நிகழ்வான இந்தத் தாவரத்தின் ஒளியாடல் வாயிலாகத் தூண்டுதலில் ஈடுபட்டுள்ளன. அதற்கு வேர்கள் கிடையாது; அதன் தண்டு மெலிதான வெறியார்வம்மிக்க ஒளியின் ஒரு தூண்; அதன் இலைகள் மிகச் சிறியவை, ஒவ்வொன்றும் ஒளி உமிழும் பிரதியின் நான்கு அல்லது ஐந்து வரிகளால் உறையிடப்பட்டுள்ளது; அதன் காம்புகள் நேர்த்தியானவை மற்றும் முரட்டுத்தனமானவை, கூர்மையான விளிம்புகளுடன். பூக்கள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவை, சூலகங்கள் மகரந்தங்களிலிருந்து மாறுபட்டவை, முன்னது தனித்துவம் வாய்ந்தவையாக, உள்ளார்ந்தவையாக மற்றும் மந்தமானவையாக இருக்கையில், பின்னது கூர்முனைகள், வார்ப்படங்கள் அல்லது மிக அரிதாக முட்கள் போன்ற வடிவம் கொண்டவை. (Myth. & Ethn.): பெண்கடவுள் டயானாவின் வில் இந்தப் புனித மரத்தின் ஒரு கிளை என பழங்குடியினர் நம்பினர். அடிமரத்தின் மீதுள்ள தழும்பு பிரபஞ்சப் (பெண்) பாலினமாக இருப்பதாக எண்ணப்படுகிறது. இது ஒரு அத்தி மரம் பற்றிய குறிப்பிட்ட கோட்பாட்டிற்கான ஒரு மறைமுகக் குறிப்பாக இருக்க முடியும் (பசுங்கிளைகளின் மரச் சாறு, பால் மற்றும் நிலவுத் தன்மை கொண்டதாக இருக்கிறது). அந்தத் தொன்மம் மானுட அர்ப்பணித்தலைக் குறியீடாகக் கொண்டுள்ளது, புதிய நிலவின் இரவில், பெண்துறவியின் வாயில் (பரப்புகளின் அடி மட்டத்திற்கும் மேல் மட்டத்திற்கும் இடையில் அவள் தானே ஒரு இணைவின் ஆதி உருவம்)  படிமங்களின் மறு உருவாக்கத்தை ஊக்கப்படுத்த ஏதுவாக, ஒரு இளைய விடலையின் உடல் (அது ஆணா, பெண்ணா, தெரியாது) நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. டயானாவின் மரம் பெண்கடவுளின் பல ஆண் தன்மைகளில் ஒன்று.  தெளிவற்ற விசயங்களின் பாலினத் தன்மையற்ற மூலங்களுக்கான மற்றொரு சான்றாக சிலர் இதைக் காண்கின்றனர். வேறு சிலர் அந்த மரம் அபகரிக்கும் ஆண் பால்வெளி மண்டலக் கூறுகளை அர்த்தப்படுத்துவதாக விவாதிக்கின்றனர், அதன் மூலம் மரபார்த்தச் சடங்குகள் சூரியனின் ஆதிகாலக் கதிர்களின் ஜாலவித்தைச் சிதைவைக் குறிப்பதாகவும் சொல்கின்றனர். நமது சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி, இந்தக் கருதுகோள்களில் ஏதாவது ஒன்றின் சார்பாகத் தீர்வு காண்பது சாத்தியமில்லை. எனினும் இந்தச் சடங்குகளைக் கொண்டாடுபவர் பின்னர் அந்த ஒளிரும் நிலக்கரிகளை விழுங்கிக் கொள்ள வேண்டும், ஒரு நடைமுறையாக இன்று அது பின்பற்றப்படுகிறது. (Blaz. & Her.): ஒரு பேசும் தோள்சட்டை. (Phys.): நீண்ட காலமாக, டயானாவின் மரத்தின் பெளதீக இருத்தலை விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். அதன் அதீதத் தெளிவின் காரணமாக, வெகு சிலர் உண்மையாகவே அதைக் காண முடிகிறது. உண்மையில், தனிமை, அவதானித்தல் மற்றும் பொதுவான நேர்த்தியான உணர்திறன் உட்பட அவசியமான பார்வைரீதியான இயல்புகளைச் சாதிப்பதற்கான முன்நிபந்தனைகள். தங்கள் அறிவார்த்தத்தின் மீது ஒரு மதிப்பை கட்டமைக்கும் தனி நபர்கள் சில வேளைகளில் தங்கள் அனைத்துச் சான்றுகளுக்காகவும், தங்களால் இன்னமும் எதையும் காண முடியவில்லை என புகார் கூறுகின்றனர். டயானாவின் மரம்  ஒரு புவி சார்ந்த விசயமாகக் கருதப்பட முடியாததை மனதில் கொண்டுள்ள அவர்களின் தவறான கருத்துருவாக்கங்களை நிவர்த்தி செய்யலாம். மாறாக, அதற்கு அப்பால் நாம் காண்பது ஒரு (உயிரூட்டப்பட்ட) பொருள்; நமது பார்வைப் புலங்களுக்கு உதவி செய்வதற்கான ஒரு இயற்கை உபகரணம். மேலும், தந்தக் கோபுர நிலைகளிலிருந்து அனைத்துவிதத்திலும் தாழ்த்தப்பட்ட தப்பெண்ணங்களுக்காக, மரபுவழி அல்லாத விமர்சகரால் மேற்கொள்ளப்படும் ஒரு துரித விசாரணை அதை முற்றிலும் நிராகரிப்பது போதுமானது. சூரிய வெளிச்சத்தில் நிலைப்படுத்தப்படும் பொழுது, டயானாவின் மரம் அதன் ஒளியைப் பிரதிபலித்து, அதன் கதிர்களை ஒரு கவிதை அழைக்கப்படும் ஒரு குவிமையத்தில் இணைக்கிறது, அது அதன் அதிர்வுகளைச் சிதைக்கக்கூடிய, மென்மைப்படுத்தக்கூடிய அல்லது வெறுமையாக்கக்கூடிய ஒளிரும் வெப்பத்தை அனுமதிக்கிறது. இந்தப் பரிசோதனைகளை நமது மொழியின் இலக்கிய விமர்சகர்களுக்குப் பரிந்துரை செய்யலாம்.

ஆக்டேவியா பாஸ்
பாரீஸ், ஏப்ரல் 1962.





டயானாவின் மரம்
அலஹேந்த்ரா பிஸார்நிக்


1.
விடியலுக்காக நானே அந்தத் துள்ளலை உருவாக்கினேன்.
ஒளியின் அருகில் எனது உடலை நிலைப்படுத்தி
பிறப்பின் துயரம் பற்றி பாடினேன்.


2.
இவை சில சாத்தியமுள்ள பதிப்புகள்:
ஒரு துளை, ஒரு நடுங்கும் சுவர்...


3.
வெறும் தாகம்
மெளனம்
முரண் இல்லை
என்னிடம் சற்று எச்சரிக்கையாயிரு, என் அன்பே
வெறுமையான கோப்பைகளுடன் உள்ள பயணியின் பாலைவனத்தில்
மெளனமாக இருக்கும் பெண்ணிடம் சற்று எச்சரிக்கையாயிரு
மற்றும் அவள் நிழலின் நிழலுடனும்.


4.
அவ்ரோரா மற்றும் ஜூலியோ கொர்த்தஸாருக்கு
                                                        இப்போது பிறகு:
நினைவிலிருந்து அகன்ற பெண்ணுக்கான அஞ்சலிகளைத்
தேடும் அவர்களின் கரங்கள் மூழ்குவதை யார் நிறுத்துவது?
குளிர் அஞ்சலி செலுத்தும். காற்று அஞ்சலி செலுத்தும். மழையும்
அஞ்சலி செலுத்தும். அதேபோல, இடிமுழக்கமும்.


5.
ஒரே ஒரு முறை திறந்த கண்களுடன்
வாழ்தலின் ஒரு சிறு தருணத்திற்காக மட்டும்
அறிவார்த்தத்தின் மீது சிறு பூக்களையும்
 குரல் இழந்த ஒரு மனிதனின் வாயில்
உள்ள சொற்களைப் போல நடனமாடுவதையும்
காணும் ஒரு நிமிடத்திற்காக மட்டும்


6.
அவளுடைய நினைவின்
பொன்னுலகத்தில் அவள் ஆடைகளைக் களைகிறாள்
அவளுடைய பார்வைக் கோணங்களின்
அச்சம் மிகுந்த விதி பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது
இருத்தலற்ற ஒன்றுக்குப் பெயரிடுவது எவ்வாறு
எனத் தெரியாமல் இருப்பது பற்றி அவள் அச்சம் கொள்கிறாள்.


7.
அவள் தாவிக் குதிக்கிறாள், மேற்சட்டை நெருப்பு பற்ற,
நட்சத்திரத்திலிருந்து நட்சத்திரத்திற்கு,
நிழலிருந்து நிழலுக்கு.
காற்றின் இந்தக் காதலனின்
நெருங்கிப் பழகாத ஒரு மரணத்தில் அவள் மரணிக்கிறாள்.


8.
ஒரு ஒளிரச் செய்யும் நினைவு, நான் எதிர்பார்த்திருந்த
நிழலால் தொல்லை தரும் ஒரு படி அரங்கம்.
அது வருகை தரும் என்பது உண்மையல்ல. அது வருகை தராது
என்பது உண்மையல்ல.


9.
இந்த உறுப்பெச்சங்கள் இரவில் பளிச்சிடுகின்றன,
ஒரு திண்மமான பறவையின் உயிர்ப்புள்ள தொண்டையில்
இந்தச் சொற்கள் மதிப்புமிக்க கற்கள் போல,
வசீகரமான இந்தப் பச்சை,
வாட்டும் இந்த இளஞ்சிவப்பு,
வெறுமையான இந்த மறைபொருள் இதயம்.
*

ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்:
யுவெட்டே ஸீகெர்த்

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக