வெள்ளி, 28 மே, 2021

தத்துவவாதிகளின் தப்பெண்ணங்கள் குறித்து... - நீட்ஷே


 

 1.
மெய்மையின் மீதான சக்தி பல துணிகர செயல்களின் மீதான சக்தியாய் இன்னமும் நம்மைத் தூண்டுகிறது. அதன் புகழ் வாய்ந்த நேர்மையை இதுவரை அனைத்து தத்துவவாதிகளும் மரியாதையுடன் பேசி வந்துள்ளார்கள். நம்முன் கிடத்தப்பட்டுள்ள இந்த மெய்மையின் மீதான சக்தி என்ன விதமான கேள்விகளை எழுப்புகிறது? விசித்திரமான, வஞ்சகமான கேள்விக்கு உட்படுத்த வேண்டிய கேள்விகள்! இன்னமும் அது ஒரு அரிதான தொடக்கமாய்த் தோன்றுகிறது. இப்போது கூட அது ஒரு நீண்ட கதை. இறுதியாக ஐயத்திற்கு இடம் அளிப்பது, பொறுமை இழப்பது மற்றும் பதற்றத்துடன் திரும்புதல் என்பது நமக்கு வியப்பானதா? கேள்விகளைக் கேட்பதற்கு கூட இந்த ஸ்பிங்ஸிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருப்பது வியப்பானதா? உண்மையில் இங்கு நம்முன் கேள்விகளைத் தொடுப்பது யார்? உண்மையில் நம்முள் “மெய்மையை” யாசிப்பது எது?

உண்மையில் இந்த சக்தியின் ஆதாரம் குறித்து கேள்விகளின் நெடுங்காலத் தேக்கத்தை அடைந்துள்ளோம் – அதீதமான அடிப்படைக் கேள்வி முன் இறுதியாக ஒரு முழுமையான நிறுத்தத்தை அடையும் வரை இந்த சக்தியின் மதிப்பு குறித்து நாம் வினவுகிறோம். நாம் மெய்மையை யாசிக்கிறோம் எனக் கொள்வோம். மெய்மை அற்றதை, மேலும் நிச்சயமற்றதை, அறியாமையை ஏன் நாம் நாடுவதில்லை?

மெய்மையின் மதிப்பு குறித்த சிக்கல் நம்முன் தோன்றுகிறது அல்லது அந்த சிக்கல் முன் நாம் தோன்றுகிறோம். நம்மில் யார் இங்கு பதில் அளிக்கும் ஈடிபஸ்? யார் கேள்வி எழுப்பும் ஸ்பிங்ஸ்? அது கேள்விகளின் அல்லது ஐயக் கேள்விகளின் சந்திப்பு என்று தோன்றுகிறது.

அது அரிதாக நம்பத் தகுந்ததாகத் தோன்றினாலும், இறுதியாக பெரும்பாலும் இதுவரை நம்முன் வைக்கப்படாத சிக்கல் போல, முதலில் நாம் சந்தித்தது போல, நமது கண்களுக்குள் பொருத்தப்பட்டது போல, ஒரு இடையூறு போல நம்முன் தோன்றுகிறது. அதில் ஈடுபடத் துணிந்தால் மேன்மையானது எதுவும் இருக்காது.
*

2
“எதிர் நிலைகளிலிருந்து எவ்வாறு ஆதார நிலை தோன்றுகிறது? உதாரணமாக தவறுகளிலிருந்து உண்மையா அல்லது வஞ்சகத்தின் மீதான சக்தியிலிருந்து மெய்மையின் மீதான சக்தியா அல்லது சுயநலத்திலிருந்து சுயநலமற்ற செயல்பாடா அல்லது காமத்திலிருந்து சந்நியாசியின் புனிதமும் தீட்சண்யமுமான பார்வையா? அவ்வாறான மூலாதாரங்கள் அசாத்தியமானவை. அவற்றைக் கனவு காண்பவன் ஒரு முட்டாள். உண்மையில் மோசமானவன். உயர் மதிப்பு கொண்ட பொருள்கள் மற்றொரு வினோதமான சிறப்பியல்பு கொண்ட மூலாதாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவை இந்த நிலையற்ற, வசியப்படுத்துகின்ற, வஞ்சகத்தன்மைமிக்க, அற்பமான உலகிலிருந்தும் காமமும் மாயையும் கொண்ட குழப்பத்திலிருந்தும் மூலத்தின் தடயத்தைப் பெற முடியாது. செயல்படுபொருளாக உள்ள மறைமுகக் கடவுளான “அதுவேயாக” உள்ள பரம்பொருளின் மடியில் தான் அவற்றிற்கான அடிப்படை இருக்க வேண்டும், வேறு எங்கும் அல்ல.

இந்த வகையில் தீர்மானிப்பது எல்லாக் காலத்திற்குமான ஆன்மிகவாதிகளின் குறிப்பிடத்தக்க முன்முடிவுகளையும் தவறான எண்ணங்களையும் கட்டமைக்கிறது. இவ்வகையான மதிப்பீடுகள் அவர்களுடைய அனைத்து தர்க்க ரீதியான போக்குகளின் பின்புலத்தில் கவிந்திருக்கிறது. இது “அறிவு குறித்து அவர்களைத் தொல்லைப்படுத்தும் “விசுவாசத்தைச்” சார்ந்தது. மெய்மை என இறுதியாகப் புனிதப்படுத்தப்பட்டவிசுவாசத்தைச்” சார்ந்தது. ஆன்மிகவாதிகளின் விசுவாசம் என்பது எதிர்நிலை மதிப்பீடுகளில் உள்ள அடிப்படை விசுவாசம் தான். இது அவர்களுக்குள் அதீத எச்சரிக்கை வாய்ந்ததாக நிகழவில்லை. அனைத்தும் சந்தேகப்படுவதற்குரியதே” என்ற டெகார்டிசிய உறுதி எடுத்துக் கொண்டுள்ள பெரும்பாலோனோருக்கும் கூட, உறுதியாக, மிகத் தேவைப்படும் இடத்தில் ஒருவர் சந்தேகப்படுவது சரியானதே என்பது தோன்றுவதில்லை.

ஒருவர், எதிர்நிலைகள் என்பவை உண்மையில் உள்ளனவா என்று முதலில் சந்தேகப்பட வேண்டும். இரண்டாவதாக, ஆன்மிகவாதிகள் தங்கள் முத்திரையைப் பதிக்கின்ற இந்த பிரபல மதிப்பீடுகளும் எதிர்நிலை மதிப்புகளும் வெறும் மேம்போக்கான கணிப்புகள் மட்டுமல்ல, அவை தற்காலிகமான புறத் தோற்றங்கள் கூட. அவை உள்ளவாறே ஒரு ஓவியர் உபயோகப்படுத்தும் பிரதிபலிப்பைப் பெறுவதற்காக சில வேளை மூலை முடுக்குகளிலிருந்தும், கீழ்ப் புறத்திலிருந்தும், தவளைப் பாய்ச்சல் பார்வையிலிருந்தும் கசியும் புறத் தோற்றங்கள். மெய்மை, உண்மை, சுயநலமின்மை ஆகியன அனைத்து மதிப்புகளுக்கும் தகுதி உடையவையாகின்றன. வாழ்வுக்கான உயர் தன்மையுள்ள, உயர்ந்தபட்ச அடிப்படையான வாழ்க்கை மதிப்பு வஞ்சகத்திற்கு, சுயநலத்திற்கு, காமத்திற்கு காரண காரியமாக அமைவது இன்னமும் சாத்தியம். உயர் தன்மையுடன் தொப்புள் உறவுள்ள, முடிச்சிடப்பட்டுள்ள வஞ்சகத்துடனும் எதிர்நிலைகள் எனத் தோற்றம் கொள்பவற்றுடன் தொடர்புள்ள நல்லது மற்றும் போற்றுதலுக்குரியவற்றின் மதிப்புகளைக் கட்டமைப்பது கூடச் சாத்தியம், சாராம்சத்தில் அவற்றுடன் இணைந்ததாகக் கூட இருக்கலாம். இருக்கலாம் தான்!

ஆனால், இவ்வகையான ஆபத்தான “இருக்கலாம்”-களுடன் அக்கறை கொள்ளும் சக்தி யாரிடம் உள்ளது? அதற்காக தத்துவவாதிகளின் ஒரு புதிய இனங்களின் வருகைக்காக உண்மையில் காத்திருக்க வேண்டும். இதுவரை நாம் அறிந்தவர்களிடமிருந்து உரையாடலின் சுவை மற்றும் மனப்பாங்கு பெற்றதைப் போல, அதாவது ஒவ்வொரு அர்த்தத்திலும் ஆபத்தான “இருக்கலாம்”-களின் தத்துவவாதிகளின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும்.


எல்லாத் தீவிரத்துடனும் புதிய தத்துவவாதிகள் தோன்றுவதை நான் காண்கிறேன்.
*

3
தத்துவவாதிகளின் விரல் ரேகைகளைப் போதுமான அளவு உற்று நோக்கிய பின் நான் எனக்குள் சொல்லிக் கொள்வதுண்டு: மாபெரும் பிரக்ஞைபூர்வமான சிந்தனைகளை உள்ளுணர்வுச் செயல்பாடுகளுக்குள் இன்னமும் உட்படுத்த வேண்டும். அவை தத்துவார்த்த சிந்தனைப் போக்கை நோக்கியும் செல்கின்றன. பாரம்பர்ய பண்புகள் குறித்தும் “உள்ளார்ந்தது” எது என்பது குறித்தும் திரும்பக் கற்க வேண்டியுள்ளதைப் போல நாம் இங்கு திரும்பவும் கற்க வேண்டியுள்ளது. முழுமையான செயல்முறைகளிலும் மரபார்த்த போக்குகளிலும் பிறப்பின் செயல் ஆழ்ந்த பரிசீலனைக்குத் தகுதிப்பாடு அற்றதைப் போல, “பிரக்ஞைபூர்வமான இருத்தல்” உள்ளுணர்வுத் தூண்டுதல்களாக உள்ள எதிர்நிலையில் எந்த முடிவான அர்த்தத்திலும் இல்லை. ஒரு தத்துவவாதியின் பெரும்பாலான பிரக்ஞைபூர்வ சிந்தனை ரகசியமாக வழி நடத்தப்படுகிறது. மேலும் அவர்களுடைய உள்ளுணர்வுகளால் சில வகை வழிமுறைகளில் செலுத்தப்படுகிறது.


அனைத்து தர்க்கங்களுக்குப் பின்னாலும் இயக்கத்தின் தலைமை நிலை போலத் தோற்றம் தரும் பின்புலத்திலும் கூட மதிப்பீடுகள் நிலை பெறுகின்றன. அல்லது மேலும் தெளிவாகச் சொல்வதென்றால், உடல் இயங்கியல் தேவைகள் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட வகையான பதப்படுத்தலுக்காக நிலை கொள்கின்றன. உதாரணமாக, நுட்பமற்ற நிலையை விட உறுதியானது என்பது மதிப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும். மேலும், “மெய்மையை” விட புறத்தோற்றம் மதிப்பில் தாழ்ந்ததாக இருக்க வேண்டும். சில கணிப்புகள் நமக்கான ஒழுங்குபடுத்தலின் முக்கியத்துவத்திற்கு பதிலாக மேம்போக்கான கணிப்புகளாக மட்டுமே, நம்மைப் போன்ற சில இருத்தல்களின் பாதுகாப்பிற்கு அவசியப்படுகிற ஒரு குறிப்பிட்ட வகை முட்டாள்தனமாக மட்டுமே இருக்கின்றன. அப்படியெனில், மனிதன் என்பவன் “பொருள்களின் அளவீடு” மட்டும் அல்ல-

4
ஒரு தீர்ப்பின் பொய்மை நமக்கு ஒரு தீர்ப்பிற்கான மறுதலிப்பாக இருக்கத் தேவையில்லை. இவ்வகையில் நமது புதிய மொழி விசித்திரமாக ஒலிக்கிறது. கேள்வி என்னவெனில், வாழ்வின் மேம்பாடு, வாழ்வின் பாதுகாப்பு, இனவகைப் பாதுகாப்பு, குறிப்பாக இனவகை பண்படுத்தல் எதுவரை என்பதே. தவறான தீர்ப்புகள் (செயற்கையான தீர்ப்புகளும்) நமக்கு இன்றியமையாது உள்ளதாக உரிமை கோரும் அடிப்படையைச் சார்ந்துள்ளோம். தர்க்கத்தின் கட்டுக் கதையை ஏற்றுக் கொள்ளாமலும் நிபந்தனையற்றதும் சுய அடையாளத்தினுடையதுமான தெளிவாகக் கண்டடைந்த உலகத்திற்கு எதிரான உண்மையை அளவிடாமலும் எண்ணிக்கை அளவில் உலகத்தின் நிலையான பிழை இல்லாமலும் மனிதனால் வாழ முடியாது. அதாவது தவறான தீர்ப்புகளைக் கைவிடுதல் என்பது வாழ்வைக் கைவிடுதல் ஆகும். மேலும் வாழ்வை மறுதலித்தலும் ஆகும். வாழ்வின் நிலைப்பாடு போல, பொய்மையை அடையாளம் காண்பது நிச்சயமாக பழக்கப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு உணர்வுகளை ஆபத்தான வழிகளில் எதிர்த்து நிற்பதாகும். ஒரு தத்துவம் நல்லதுக்கும் தீயதுகளுக்கும் அப்பாலான அடையாளத்திற்காக மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக