கலை என்பது மனிதன் வசம் சிக்கிய உணர்ச்சிவயக் களியாட்டம் என்றார் பிரிட்டிஷ் கவிஞர் ஜான் டான். கார்த்திக் நேத்தா கவிதைகள் அதன் வெளிப்பாடா? வாக்கியத் திருப்பங்கள், செறிவு, உருமாற்றம், சொல்லழுத்தம் எனச் சொற்கள் களியாட்டம் புரிய ஒரு படைப்பு உருவாகிறது.
மீமெய்யியல்
கவிதை வகையில் கூறப்படும் விவரணைக் குரல்களின் சொல்லழுத்தமும் உயிர்ப்பும் கார்த்திக்
நேத்தாவின் கவிதைகளில் காண முடிகிறது. விசாரணை ஒழுங்கும், முற்றுமுடிபான உணர்வெழுச்சியும்
சக்திவாய்ந்தவை. அவற்றை நன்றாகக் கையாண்டிருக்கிறார்.
நான்
யாரின் உள்ளாடை?
என்னைத்
துறந்து என்னைக் காக்கும்
வகை
எதுவோ திகிரிகோனே?
...
சும்மா
இருந்து ஞானமடைவதில்
உனக்கென்ன
சிரமம்?
...
வியர்வையாய்
வழிந்து
சொட்டும் கூரிய வலி
தாலாட்டுப்
பாடலாய்
மாறிக்
கொண்டிருப்பது
விந்தையா?
வாழ்க்கையா?
...
காமத்தின்
வேகத்தைவிட
வேகமானதா
ஒளியின்
வேகம்?
...
பட்டின்
நினைவுகளோடு
உன்
சிட்டுக்கு நீ முத்தம் வைத்தால்
அவளுக்கெப்படிச்
சிலிர்க்கும்?
உனக்கும்தான்
எப்படிச் சிலிர்க்கும்?
...
மின்னலின்
குரல்
அதன்
ஒளிதானா?
மழையிலிருந்து
ஓசையைப்
பிரித்துவிட்டால்
மழை
எது?
...
ஒரு
அனுபவம் மிக நேர்த்தியாக, செறிவாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு வார்த்தைக்குப் பிறகும்
ஒரு திருப்புமுனையைச் சந்திக்க வேண்டியுள்ளது. காட்சிகளின் ஓட்டத்தில் நம்மைத் தொலைத்து
விடும் தருணங்களும் நிகழ்கின்றன. ஒரு கவிதையின் கடைசி வரியின் முற்றுப்புள்ளிக்கு அப்பால்
நாம் எங்கும் செல்ல வேண்டியதில்லை. உணர்வுகளின் அதீதங்களை வார்த்தைகளுக்குள் பொத்தி
வைத்திருக்கிறார்.
அதீத
விரைவான திருப்பங்கள் தூண்டுதலின் வலிமை கொண்டவையாக உள்ளன. வரிகளுக்குள் ஊடாடும் குரல்
அனைத்து இடையீடுகளையும் மெளனநிலைக்குள் ஆழ்த்திவிட்டு நம்மைச் சற்று திகைக்க வைக்கிறது.
சாகப்
போவது நீ இல்லை
என்றானபின்
செத்துக்
கொண்டே இரு
என
முடிவுறும் கவிதையில் மனம், உடல் மற்றும் உயிர் வேறுவேறு என உணர அழைக்கிறார். இறுதி
வரியில் ஒரு திகைப்பு. அனைத்தும் அறிந்து நித்யத்துவமாய் இருக்க செத்துக் கொண்டிருக்கச்
சொல்கிறார். நிர்வாணத்திலிருந்து நித்தியத்துவம் நோக்கி அழைக்கிறார்.
ஒரு சொற்றொடரை மினிமலிசம் என வரையறைப்படுத்துவது என்பது நிச்சயமாக ஒரு
உறுதிப்பாட்டை வலியுறுத்துவதுதான்; சிக்கலின்மை மூலம் ஒரு சொல்லாடலின் நேரடித்தன்மையை
வெளிப்படுத்துவதுதான்.
ஒரு கவிதை-
நிலத்தில் கட்டி வைத்த
காற்றுப் பட்டம் படபடக்கிறது
அசைவிப்பவன் எவனோ
...
மற்றொரு கவிதை-
நிலத்தின் மரத்தில்
அசையும் இலையின்
நீர்பிம்பத்தைக் கடக்கிறது காற்று
ஒரே காற்றுதான்
ஒரே இலைதான்
இரு அசைவுகள்
அத்வைதம் என்பதுகூட ஒருவித மினிமலிசம் தானே. ஒற்றைநிலையை வெளிப்படுத்தும்
கவிதை இது. மரம், இலை, காற்று என நம்மை அந்தக் காட்சிக் களத்தில் ஒரு சில கணம் நிறுத்தி
வைத்து ஏதுமற்ற நிலையை உருவாக்குகிறது. இதில் நம் உடல் எது, மனம் எது என்பதை அறிந்து
மையத்தை அடையும் எளிமையை அடையாளம் காணலாம்.
செய்நேர்த்தியின் பன்முகத் தன்மை அர்த்தங்களின் செறிவுக்கு ஒரு கிளர்ச்சியைத்
தருகிறது. புனைவு உருமாற்றங்களும் ஒப்பீடுகளும் மீமெய்யியலின் முத்திரைகள் எனச் சொல்லப்படுகின்றன.
பறவையின் பாடல் என்றொரு கவிதை-
பறவையின் பாடலாய்
வந்து கொண்டிருக்கிறது இறகு
தான் வீழ்ந்து
நடுக்கடல் நிலவை அது
நொறுக்கி விளையாடுகிறது
அசைவின்மையின் மூலம்
மீன்களை வரவழைத்து
மாயம் நிகழ்த்துகிறது
அகாலத்தை நோக்கிய படகாய்
மிதந்து கொண்டிருக்கிறது
எதனால்
கடல்சிறுமியின் அல்குலை
அது நினைவுபடுத்துகிறது?
இந்த வியப்பூட்டும் படிமம் ஒரு புதிய கண்ணோட்டம் வாயிலாக திரும்பவும்
அக்காட்சிகளுக்குள் ஈர்க்கிறது. ஒரு படிமம் எல்லை கடந்த அர்த்தத்தை வழங்க உருமாற்றம்
என்பது ஏதுவாக அமைகிறது. கவித்துவத்தை நிலைப்படுத்தும் மொழியின் சிலிர்ப்பூட்டும் சாத்தியப்பாடுகளை
அது காண்பிக்கிறது. காமம், தியானம் என கவிதைக்குள் பேசும் குரல் இந்த இரட்டைத் தன்மையைத்
தொடர்ந்து பேசியபடி செல்கிறது.
கவிதைகளை வலி, வியப்பு, களிப்பு போன்ற ஒரு வடிவத்தின்
வெளிப்பாடுகளாக வகைமைப்படுத்தலாம். காமம் என்பது உளரீதியான, ஆன்மீக மற்றும் உடல்ரீதியான
வலியாக வெளிப்படுகிறது. பாதலேருக்கு வலி என்பது பாவச்செயல்களுடனும் சிதைவுற்ற தியானத்துடனும்
அதே போல, திருப்தியுறாத உடல் இச்சைகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது போல.
ஒரே விதமான சொற்களைத் திரும்பத் திரும்பக் கையாள்வது தீவிரத் தன்மையை
அதிகரிப்பதற்கான ஒரு உத்தி. தான் அடைந்த பரவச உணர்வுகளை வாசிப்பவரும் அடைய வேண்டுமென
கவிஞன் கையாளும் உத்தி. அடிப்படை நம்பிக்கைகளை உடைப்பது, புறக்கணிக்கப்பட்டவைகளுக்கு
ஒரு நேர்த்தியை, ஒரு உயர் நிலையை வழங்குவது ஒரு பின்-நவீனத்துவ உத்தி.
காற்று, மரம், காமம் என்னும் சொற்கள் திரும்பத் திரும்ப ஒலிக்கின்றன.
சுடர் என்றொரு சொல். அந்த ஒற்றைச் சொல்லைப் பல்வேறு தருணங்களில் பல்வேறு மையங்களை நோக்கி
நம்மை நகர்த்தப் பிரயோகிக்கிறார்.
நிற்க வைத்த சுடராக
எரிந்து கொண்டிருக்கிறது
சொல்
...
நிறையப் பூச்சிகளைத் தின்றும்
பறக்கத் தெரியாத சுடர்
மனமா?
...
சுடர் குளிப்பதற்காக
இருளைக் கட்டிவிட்டு
மலம் கழிக்க நடந்தது
வானம்
...
சுடரின் கூந்தலாக
சுற்றிலும் இருள்
...
சுடரில் அமர்ந்து
இருளைக் கவனிக்கிறது
சகோரப் பறவை
...
திரியில் விதைத்த விதை
சுடராகச் செழித்ததடி
...
கவிதைகள் முழுவதும் ஒரு மென்குரல் நம்மை வழிநடத்துகிறது. அதீதத் தீவிரத்தை
எட்டாத தொனி, குரூரத்தை வெளிப்படுத்தாத மென்மை என கவிதைகளில் ஒரு நேர்த்தியும் ஒழுங்கும்
இருப்பதைக் காண முடிகிறது. அன்பும் இச்சையும் உளரீதியான செயல்பாங்குகளுக்கு அதீத நெருக்கத்தை
வழங்குவதை வியப்புடனும் திகைப்புடனும் களிப்புடனும் காணும் கவிதைகள்.
*
தேனை
ஊற்றித் தீயை அணைக்கிறான் திகம்பரன் (கவிதைத் தொகுப்பு)
கார்த்திக்
நேத்தா
முதல்
பதிப்பு: ஜனவரி 2019
வெளியீடு:
தமிழினி
***
https://shareasale.com/r.cfm?b=1662368&u=2859698&m=103309&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1772141&u=2859698&m=110488&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1741000&u=2859698&m=108514&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1689334&u=2859698&m=104872&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1531977&u=2859698&m=96940&urllink=&afftrack=
https://shareasale.com/r.cfm?b=1626256&u=2859698&m=101580&urllink=&afftrack=
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக